பேராக் அம்னோ தலைவர்கள், நேற்றிரவு ஈப்போவில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு, மந்திரி பெசார் (எம்பி) வேட்பாளர் பரிந்துரை குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டனர்.
இருப்பினும், மூன்று பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகக் கட்சி வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.
“இதுவரை, பேராக் எம்பி பதவிக்கு மூன்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, பேராக் அம்னோ தலைவர் சாரணி மொஹமட், முன்னாள் எம்பி ஸம்பிரி கதிர் மற்றும் ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் ஜமான் யஹ்யா.
“ஆனால், சாரணிக்கு மாநில அம்னோ தலைவர் என்ற நிலையில் அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது, இருப்பினும் ஸம்பிரிக்கு அனுபவம் உண்டு.
“இருப்பினும், சாரணியும் நான்கு தவணைகள் மக்கள் பிரதிநிதியாக இருந்துள்ளார்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
மாநில அம்னோ தலைமையகத்தில், கூட்டம் முடிந்து வெளியேறிய ஜாஹிட் செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார். மற்ற தலைவர்களும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
கட்சி வட்டாரங்களின் கூற்றுப்படி, அக்கூட்டத்தில் இறுதி வேட்பாளர் முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
நேற்று, செண்டிரியாங் சட்டமன்ற உறுப்பினரும், பெர்சத்து துணைத் தலைவருமான அஹ்மத் பைசல், எம்பி பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவைப் பெறத் தவறிவிட்டார்.
அவருக்கு ஆதரவாக 10 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த வேளை, 48 பேர் எதிராக வாக்களித்தனர்.
இதற்கிடையில், பேராக்கில் தேசியக் கூட்டணி அரசாங்கம் இன்னும் ஆட்சியில் உள்ளது என்பதில் அம்னோ உறுதியாக இருக்கிறது.
பேராக் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி பெசாரை மாற்ற மட்டுமே விரும்பினர், அரசாங்கத்தை அல்ல என்று கட்சியைச் சேர்ந்த ஒருவர் விளக்கினார்.
“ஒரு புதியக் கூட்டணி என்றக் கேள்வி எழவில்லை, ஏனெனில் இப்போது வரை பேராக் அரசாங்கம் தேசியக் கூட்டணியின் கீழ் உள்ளது.
“இருப்பினும், பேராக் புதிய அரசாங்கத்தில் சேரப்போவதில்லை என்று பாஸ் தெரிவித்துள்ளதால், மாற்றங்கள் ஏதும் நிகழுமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.
நேற்று, பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான், பேராக் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் கட்சி பங்கேற்காது என்று தெரிவித்தார்.