அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை ஈப்போவில் அமைந்துள்ள இஸ்தானா கிந்தாவில் இன்று காலை சந்தித்தார்.
பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இன்று காலை 9.48 மணிக்கு அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்தார்.
நேற்றிரவு, மாநில அளவிலான அம்னோ கூட்டத்திற்குப் பிறகு, நிருபர்களைச் சந்திக்காமல் அனைத்து தலைவர்களும் மாநில அம்னோ தலைமையகத்திலிருந்து வெளியேறினர்.
எவ்வாறாயினும், மூன்று பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக அம்னோ வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன, அதாவது, பேராக் அம்னோ தலைவர் சாரணி மொஹமட், முன்னாள் எம்பி ஸம்பிரி கதிர் மற்றும் ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் ஜமான் யஹ்யா.
நேற்று, பேராக் பி.எச். கூட்டணியும் சாரணியும் சுல்தான் நஸ்ரினை சந்தித்தனர், ஆனால் அஹ்மத் பைசல் அஸுமுக்குப் பதிலாக புதிய மந்திரி பெசார் வேட்பாளர் இல்லை என்று அந்த நேரத்தில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அம்னோவுக்கு மாநில அரசாங்கத்தை உருவாக்க போதுமான எண்ணிக்கை உள்ளதா என்பது நிச்சயமற்றது. அக்கட்சி 25 சட்டமன்ற இடங்களைக் கொண்டுள்ளது, குறைந்தபட்சத் தேவையைவிட, ஐந்து இடங்களுக்கும் குறைவாக உள்ளது.
பெர்சத்துவுக்கு ஐந்து இடங்களும், புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் பங்கேற்க மாட்டேன் என்று கூறும் பாஸ்-க்கு மூன்று இடங்களும் உள்ளன.
அம்னோ மற்றும் பாஸ்-இடமிருந்து, போதுமான ஆதரவைப் பெற அம்னோ தவறினால், 24 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட எதிர்கட்சியான பக்காத்தான் ஹராப்பானின் ஆதரவை அம்னோ பெற வேண்டும்.