‘பேராக் நெருக்கடியை வாய்ப்பாகக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்’

பேராக் நெருக்கடியை ஒரு வாய்பாகக் கொண்டு, 2021 வரவுசெலவுத் திட்டம், அடுத்த பொதுத் தேர்தலுக்கானப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மீண்டும் விவாதிக்க ஒரு வாய்ப்பாக மாற்றுமாறு டிஏபி இளைஞர் துணைத் தலைவர் மொஹமட் ஷாகிர் அமீர் வலியுறுத்தினார்.

பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) நிர்வாகத்தின் போது தொடங்கிய நிர்வாக சீர்திருத்த நிகழ்ச்சி நிரலைத் தொடரவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் புரிதலை அடையவும் அவர்களின் தற்போதைய வேறுபாடுகளை நீக்க வேண்டும் என்று ஷாகிர் கூறினார்.

குழு மட்டத்தில், 2021 வரவுசெலவுத் திட்டத்தைப் பலமுறை நிராகரிக்கத் தவறியதை அடுத்து, பேச்சுவார்த்தைக்குத் திரும்பி வந்து, புதிய ஒத்துழைப்புக்கான நிபந்தனைகளை எதிர்க்கட்சிகள் முடிவுசெய்ய வேண்டும் என்ற அமானா இளைஞர் பிரிவு தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின் அழைப்பை அவர் ஆதரித்தார்.

“அம்னோ முன்மொழிந்த பேராக் மந்திரி பெசார் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பெர்சத்துவைச் சேர்ந்த மந்திரி பெசார் பதவி விலக்கப்பட்டது, தேசியக் கூட்டணியில் (பி.என்.) உறுப்புக் கட்சிகளுக்கிடையிலான பிளவு மோசமடைந்து வருவதைக் காட்டுகிறது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘உம்மா’க்கள் ஒற்றுமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் பி.என். அரசாங்கம், அதை உருவாக்கியப் பல கட்சிகளின் பேராசையால் புரிந்துணர்வை அடையத் தவறிவிட்டது என்று ஷாகிர் மேலும் கூறினார்.

“மாநில அல்லது மத்திய மட்டத்தில், பிஎன் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்தியப் பல நிர்வாக சிக்கல்கள், அவர்கள் அதிகாரத்தைப் பிடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர் என்பதையும், மக்கள் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்பதையும் காட்டுகின்றன.

“எனவே, பிஎன் நிர்வாகத்தின் பிளவு மற்றும் தோல்வியைக், கூட்டாகப் பயன்படுத்திக் கொள்ள, பி.எச். தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராஹிம், பெஜுவாங் தலைவர் டாக்டர் மகாதிர், வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால், சரவாக் பெர்சத்து கட்சி, முடா மற்றும் உப்கோ ஆகியத் தலைமையிலான எதிர்க்கட்சியினர் முன்வரவேண்டும் என பெரும்பான்மையான அடிமட்ட மற்றும் பி.எச். ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.

“சரவாக் மாநிலத் தேர்தல் மற்றும் 15-வது பொதுத் தேர்தல்களை எதிர்கொள்ள, ஒத்துழைப்பை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியம்,” என்று அவர் மேலும் கூறினார்.