`பேராக் எம்பி வெளியேற்றப்பட்டது, மகிழ்ச்சி தரும் சம்பவமா?` – டாக்டர் ஜெயக்குமார்

விமர்சனம் | பேராக் மாநிலச் சட்டசபையில், அஹ்மத் பைசல் அஸுமு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி கண்டார் என்றச் செய்தி பெரும்பாலான பேராக் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பேராக் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில், அவர் கவிழ்க்கப்படலாம் என்று கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றக் கூடலின் போதும் வதந்திகள் வந்துள்ளன. ஆனால், அப்போது எதுவும் நடக்கவில்லை. எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை, அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் 48 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவர் இழந்தார்.

 

பி.எஸ்.எம்.-உடன் பணிபுரிந்த பல சமூகத் தலைவர்கள், இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க அழைப்பு விடுத்தனர். இது நமக்கு நன்மை பயக்குமா? அவர்கள் எனது கருத்தை அறிய விரும்பினர். நான் அவர்களுக்கு ஒரு கேள்வியுடன் பதிலளித்தேன் – ஃபைசால் உங்களுக்கு நன்மை பயக்கும் கொள்கைகளைச் செயல்படுத்தினாரா?

சுங்கை சிப்புட்டில் உள்ள பி40 குழுவினர், தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியின் போதிருந்து, வாடகை-சொந்த வீடு (rent-to-own) வீட்டுத் திட்டத்தைக் கேட்டு வருகின்றனர். அவர்களின் முறையீடுகள் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசியக் கூட்டணி அரசாங்கங்களிடமிருந்து நேர்மறையான பதிலைப் பெறவில்லை.

போஸ் பியா மற்றும் ஜலோங் திங்கி (சுங்கை சிப்புட்) பூர்வக்குடியினர், அவர்கள் பகுதிகளில் காட்டுமரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த, மாநில அரசு உதவ வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தனர். தான் பூர்வக்குடியினர் மீது அதிக அக்கறை கொண்டவன் என்று ஊடகங்களில் பேட்டியளித்த ஃபைசால், தொடர்ந்து புதியப் பகுதிகளிலும் காட்டுமரங்களை வெட்ட அனுமதி அளித்தார்.

பேராக்கில் உள்ள சிறுதோட்டக் காய்கறி விவசாயிகள், தங்கள் விளைநிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவதை மந்திரி பெசார் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் – ஆனால் பயனில்லை. தங்களைச் சந்திக்கக் கோரி பல கடிதங்கள் அனுப்பியும், ஃபைசல் அந்த விவசாயிகளைச் சந்தித்ததில்லை

உதவி தேவைப்பட்ட இந்தக் குழுக்களுக்கு, அவர் ஒரு சிறந்த ஆதரவாளராக இருக்கவில்லை என்பது இதன்வழி தெளிவாகிறது. ஆனால், நாம் மகிழ்ச்சியடைய ஏதாவது காரணம் இருக்கிறதா? ஃபைசலுக்கு மாற்றாக, அம்னோ அணியில் இருந்து வரும், மந்திரி பெசார் மக்களின் கோரிக்கைகளுக்கு வரவேற்பு அளிப்பாரா?

பேராக்கின் பி40 குழுவினருக்கு வீடுகள் கட்ட மத்திய அமைச்சை வலியுறுத்த அல்லது ஓராங் அஸ்லி மக்கள் கிராமங்களுக்கு 300 ஏக்கர் நிலத்தை கேஸட் செய்ய தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவாரா?

அல்லது உணவு உற்பத்தியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் நீண்டகால குத்தகை வடிவில் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நிலத்தை உணவு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துமாறு கட்டளையிடுவாரா?

புதிய மந்திரி பெசாரால் இவற்றையெல்லாம் செய்ய முடியும், நமது கூட்டாட்சி அரசியலமைப்பின் படி, நிலம் என்பது மாநில அரசின் தனிச்சிறப்பு. ஆனால், அவர் செய்வாரா?

இப்போது வரை, மாநில மட்டத்தில் உள்ள அரசியல் உயரடுக்குகள், நிலத்தின் மீதான தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, காட்டுமரங்களை வெட்டும் முதலாளிகள், நில மேம்பாட்டாளர்கள் மற்றும் தொழில்துறை அதிபர்களிடமிருந்து பெரும் பணத்தைப் பெற்று, தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயேக் குறியாய் இருக்கின்றனர்.

புதிதாகப் பதவி ஏற்கும் மந்திரி பெசார் சற்று வித்தியாசமாக இருப்பாரா? வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்காக தயாராவதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், பி40, ஒராங் அஸ்லி மற்றும் சிறு விவசாயிகளின் நலன்களையும் அவர் கவனிப்பாரா?

அல்லது இந்தக் குழுவினரின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன், ஹராப்பான் அம்னோவைச் சார்ந்த மந்திரி பெசாருக்குத் தனது ஆதரவை அளிக்குமா?

நம்பிக்கை என்பது ஒரு நேர்மறையான பண்பு, ஆனால் அது முட்டாள்தனமாக நம்பத்தகாத எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் போது அல்ல. சவால் செய்யப்படும்போதுதான் அதிகாரம் ஒப்புக்கொள்ளப்படும் – பல இன மக்கள் ஒன்று சேர்ந்து, அடிமட்ட இயக்கத்தை உருவாக்கும் போது, ​​அது சமூக நீதியை அதன் முதல் முன்னுரிமையாக வைக்கிறது.

நல்ல கொள்கைகள் “கீழிருந்து மேலாக” இருக்க வேண்டும்! சாதாரண குடிமகன் உயரடுக்கின் மகத்துவத்தை மட்டும் நம்ப முடியாது. துரதிர்ஷ்டவசமாக மலேசியாவைப் பொறுத்தவரை, மே 2018 முதல் பல இன அடிமட்ட இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான இலக்கிலிருந்து நாம் விலகிச் சென்றுவிட்டோம்.

ஃபைசலைப் பதவியிலிருந்து அகற்றுவதில், சாதாரண பேராக் குடிமக்கள் ஆர்வமாக இருப்பதற்கு உண்மையில் எந்தக் காரணமும் இல்லை, ஆனால் பயப்பட வேண்டியது அதிகம். எதிர்பாராவிதமாக, மீண்டும் ஒன்றிணைத்து பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட மாநில அரசை அமைக்க யாருக்கும் சாத்தியமில்லை.

அவ்வாறான நிலையில், பேராக் சுல்தானுக்கு மாநிலச் சட்டசபையைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை, அதாவது 60 நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும்.

சபா மாநிலத் தேர்தல் கோவிட் -19 தொற்றுநோயை எவ்வாறு தூண்டியது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். பெரும்பாலான பேராக் மக்கள், இங்கு அதுபோல் நடப்பதை விரும்பவில்லை. பலர் நோயுறுவது மட்டுமல்லாமல், நடமாட்டக் கட்டுப்பாட்டு தடைகளால் பொருளாதாரம் மீண்டும் முடங்கிவிடும், மேலும் பலர் பொருளாதார இழப்பைச் சந்திப்பார்கள்.

மாநிலத் தேர்தல் நடத்தப்பட்டால், தேசிய முன்னணி, ஹராப்பான், பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய முக்கியப் போட்டியாளர்கள் நியாயமாக களமிறங்கி, பகுத்தறிவு வாதங்களைப் பயன்படுத்துவார்களா அல்லது தீய அச்சுறுத்தலான, இன அச்சங்களையும் சந்தேகங்களையும் பயன்படுத்துவார்களா?

இது ஒரு பல்லின அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் இருந்து, நம்மை மேலும் விலக்கி வைக்கும் – ஏற்பட்டுள்ளக் காயங்களைக் குணப்படுத்தவும், இந்த நாட்டை வழிநடத்தவும் நமக்குத் தேவை பல்லின, பல மத ஒருமித்த கருத்தை உருவாக்கக்கூடிய ஒரே இயக்கம், அதிக நல்லிணக்கம், நீதி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியது.


டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், பி.எஸ்.எம். தேசியத் தலைவர்