இரு கட்சிகளின் ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு புதிய அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்களிடமிருந்து அறிவிப்பு வந்தபோதிலும், தற்போதைய அரசாங்கத்தைப் பராமரிக்க, தேசியக் கூட்டணி (பி.என்.) அம்னோவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிகிறது.
முன்னாள் மந்திரி பெசார் அஹ்மத் பைசல் அஸுமுவுக்கு நெருக்கமான வட்டாரத்தின் கூற்றுபடி, பேராக்கில் தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான பாஸ், கெராக்கான் மற்றும் சுயேட்சையைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களும் சில நிபந்தனைகளுடன் அம்னோவை ஆதரிக்க தயாராக உள்ளதாகத் தெரிகிறது.
“ஆம், எனக்குத் தெரிந்தவரை எங்கள் பேச்சுவார்த்தைகள் இன்னும் நிறைவடையவில்லை. ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் ஜமான் யஹ்யாவைப் புதிய மந்திரி பெசாராக நியமித்தால், அம்னோவுடன் ஒத்துழைக்க பி.என். கூட்டணி தயாராக உள்ளது.
“ஃபைசல் அஸுமு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பின்னணியில், மாநில அம்னோ தலைவர் சரணி மொஹமட் தான் சூத்திரதாரி என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் அவர்மீது நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்,” என்று அந்த நபர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இந்த விடயம் கடந்த சனிக்கிழமையன்று, பேராக், ஈப்போவில் விவாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“கலந்துரையாடலின் போது, பாஸ்-உம் கூட இருந்தது. பேராக் பிஎன் அம்னோவை ஆதரிக்க தயாராக உள்ளது, ஷாருல் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவாரானால்,” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், இது குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் தனக்குத் தெரியாது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக கருத்தறிய, மலேசியாகினி ஃபைசலைத் தொடர்பு கொண்டுள்ளது.
இதற்கிடையில், ஷாருல் முகநூல் அறிக்கை ஒன்றில், அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சரணியைப் பேராக் மந்திரி பெசாராக நியமிக்க பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மொத்தம் 26 சட்டமன்ற உறுப்பினர்கள் சரனிக்குப் புதிய மந்திரி பெசாராக ஆதரவு தெரிவித்து பிரமாண பத்திரத்தில் (எஸ்டி) கையெழுத்திட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
25 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களைத் தவிர்த்து, ஒரு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினரும் சரணியை ஆதரித்ததாக சினார் ஹரியான் நாளிதழ் தெரிவித்துள்ளது.