பேராக்கில் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்காக, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச். – டிஏபி, பி.கே.ஆர்., அமானா) மற்றும் அம்னோ இடையிலான ஒத்துழைப்பு சாத்தியமானால், அதில் மக்கள், குறிப்பாக பி.எச். ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்று மாச்சாப் ஜெயா பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர் கினி லிம் கூறினார்.
கூட்டணியின் தீர்மானத்தால் குழப்பமடைந்த லிம், ஒத்துழைப்பு என்பது கொள்கைகள் அடிப்படையில் அல்ல, மாறாக அரசியல் மற்றும் மக்கள் நிலைத்தன்மை என்ற பெயரில், அவரவர் தனிப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக வலியுறுத்தினார்.
“இந்த முன்மொழிவு பி.எச். ஆதரவாளர்களையும் மக்களையும் ஏமாற்றமடையச் செய்யும், ஏனென்றால் 2018 ஆம் ஆண்டு, 14-வது பொதுத் தேர்தலில், நஜிப் ரசாக்கின் கீழ், பாரிசான் நேஷனல்-அம்னோ தலைமையிலான ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நிராகரிப்பதற்கே மக்கள் வாக்களித்தனர்.
“ஆகவே, பி.எச். மீண்டும் அம்னோவுடன் ஒத்துழைத்து, ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சிக்கு, ஒரு புதிய பொறுப்பை வழங்கினால், அது மக்கள் ஆணைக்குத் துரோகம் இழைத்ததாகப் பொருள்படும்,” என்று லிம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அத்தகையக் கூட்டணி அரசியல் நோக்கம் கொண்டது என்பதால் நீண்ட காலம் நீடிக்காது என்று லிம் எச்சரித்தார்.
“கொள்கைகள் இல்லாத அரசியல், எப்போதும் சூழ்ச்சியும் அவநம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கும்.
“இறுதியில், வெறுமனே அரசாங்க நிலைத்தன்மை மற்றும் மக்களின் நன்மை என்ற பெயரில், பதவிகளுக்கும் அதிகாரங்களுக்கும் மட்டுமே போட்டிகள் நடக்கும்.
“இதுதான் தொடரப்படும் என்றால், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நடந்த சீர்திருத்தப் போராட்டம் பயனற்ற ஒன்றா,” என்று அவர் கேட்டார்.