பேராக் மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பான் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கத்தை அமைக்க, அம்னோ உத்தேசித்து வருகிறது.
இருப்பினும், அதில் ஒரு சிக்கல் உண்டு, மாநில ஆட்சிக்குழுவில் டிஏபி இடம்பெறக்கூடாது எனப் பேராக் அம்னோ விரும்புவதாகப் பேச்சுவார்த்தைக்கு நெருக்கமான ஒரு தரப்பு கூறியுள்ளது.
அம்னோவும் டிஏபியும் அரசியலில் பாரம்பரிய எதிரிகளாகக் கருதப்படுகின்றன, ஒன்று மற்றொன்றை விமர்சிப்பதன் மூலமே தேர்தல்களில் ஆதரவைப் பெற்று வந்துள்ளன.
எனவே, இந்தப் பாரம்பரியம் மாறினால், அது அடிமட்ட மக்களிடையே அம்னோவின் நிலையைப் பாதிக்கும் என்று அம்னோ கருதுவதாக அத்தரப்பு தெரிவித்தது.
எனவே, பேராக் புதிய அரசாங்கத்தில், பி.கே.ஆர். மற்றும் அமானா மட்டுமே ஆட்சிக்குழுவில் இடம்பெற அனுமதிக்கப்படும் என்று அம்னோ நிபந்தனை விதிக்க எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
“இந்தக் கோரிக்கை முற்றிலும் நியாயமற்றது” என்று அந்த வட்டாரம் கூறியது, 25 இடங்களைக் கொண்ட அம்னோவுக்குப் பிறகு, பேராக்கில் அதிக (16) இடங்களைக் கொண்ட கட்சியாக டிஏபி இருக்கிறது.
அதுமட்டுமின்றி, டிஏபி, பி.கே.ஆர். மற்றும் அமானா என பி.எச். உறுப்புகட்சிகளை ஒட்டுமொத்தமாக அம்னோ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
நேற்று, பேராக் அம்னோ மற்றும் பி.எச். தலைவர்களின் சந்திப்பு, ஒரு இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இறுதி முடிவு, இன்று மத்திய மட்டத்தில் அம்னோ மற்றும் பி.எச் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பைப் பொறுத்தது.
பேராக் அரசாங்கத்திற்கு, 2021 வரவுசெலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன. இந்தப் புதன்கிழமை மாநிலச் சட்டமன்றம் மீண்டும் கூட்டப்படும்.