நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,600 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகிய நிலையில், 1,033 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நெகிரி செம்பிலான் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை (541 அல்லது 33.8 %) இன்று பதிவிட்டுள்ளது. அதனையடுத்து சிலாங்கூரும் (26.6 %) சபாவும் (15.5 %) உள்ளன.
நெகிரி செம்பிலானில் புதிய பாதிப்புகளில் பெரும்பாலானவை (500), ஒரு சிறைச்சாலை சம்பந்தப்பட்ட பக்தி திரளையிலிருந்து வந்தவை.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதி (சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர்) நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளைக் (574 அல்லது 35.85) கொண்டுள்ளது.
இன்று இருவர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். இருவரும் சபா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆக, நாட்டில் இதுவரை இறந்தவர் எண்ணிக்கை 384 எனப் பதிவாகியுள்ளது.
அவசரப் பிரிவில் 129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 57 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
புத்ராஜெயா, திரெங்கானு மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
நெகிரி செம்பிலானில் 541, சிலாங்கூரில் 426, சபாவில் 248, ஜொகூரில் 98, கெடாவில் 18, பினாங்கில் 55, பேராக்கில் 54, கோலாலம்பூரில் 148, லாபுவானில் 5, கிளந்தானில் 3, சரவாக்கில் 2, பஹாங் மற்றும் மலாக்காவில் தலா 1.
மேலும் இன்று, 2 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-
மலாவத்தி திரளை – சிலாங்கூர், கோல சிலாங்கூர் மாவட்டம்; அவான் லெம்பா கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் & தித்திவங்சா மாவட்டங்கள்.