மனித உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனமான `சுவாராம்` தொகுத்துள்ளத் தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட 2020-ம் ஆண்டில் தேசத்துரோகச் சட்டத்தின் கீழான விசாரணைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (சி.எம்.ஏ.), பிரிவு 233-ன் கீழான விசாரணைகள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.
சுவாராம் 2020 மனித உரிமை அறிக்கையின்படி – இந்த ஆண்டு தொடங்கப்பட்ட தேசத் துரோகச் சட்டத்தின் கீழ், 20 விசாரணைகள் இருந்தன, அவற்றுள் 19 அரசாங்க மாற்றத்திற்குப் பிறகு வந்தன.
2019 அறிக்கையில், 12 தேசத்துரோக விசாரணைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், 2020-ம் ஆண்டில் 93 சி.எம்.ஏ. விசாரணைகள் பதிவு செய்யப்பட்டன, இது கடந்த ஆண்டில் 34 மட்டுமே. இந்த ஆண்டு சி.எம்.ஏ. விசாரணைகளில் 23, மார்ச் மாதத்தில், அரசாங்க மாற்றத்திற்கு முன் தொடங்கப்பட்டவை.
2020-ம் ஆண்டில் சி.எம்.ஏ. விசாரணைகளில், 15 போலிஸ் மற்றும் பிற அதிகாரிகள், 15 இரு தரப்பு அரசியல்வாதிகள், 14 அரசப் பரம்பரை சார்ந்த விமர்சனங்கள் அல்லது அவமதிப்புகள், அச்சுறுத்தல்கள் உட்பட்ட ஊடகப் பதிவுகளினால் பாதிக்கப்பட்டவர்கள்.
13 பதிவுகள் கோவிட் -19 மற்றும் போலி செய்திகள் தொடர்பானவை.
2019-ம் ஆண்டில், ஆயுதப்படை தொடர்பாக 1 விசாரணை, அரசியல்வாதிகள் மீது 6 மற்றும் அரசப் பரம்பரை குறித்து 3 விசாரணைகள் மட்டுமே நடந்தன.
“பிரிவு 233 விதி, போலி செய்திகள் பரப்புவது தவிர, 2020 அரசியல் நெருக்கடியின் போது, அரசியல் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
“இணையத்தில் இடுகையிடும் சமூக ஊடகப் பயனர்கள், மன்னரை அல்லது பிரதமரை அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்துவதாகக் கூறப்பட்டு, கைது செய்யப்பட்டனர், விசாரிக்கப்பட்டனர் அல்லது அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்,” என்று சுவாராம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசத் துரோக விசாரணைகளைப் பொறுத்தவரை, ஆறு அரசியல்வாதிகள் மற்றும் ஏழு ஆர்வலர்கள் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 2020-ல் விசாரிக்கப்பட்டன, 2019-ல் நான்கு அரசியல்வாதிகள் மற்றும் ஓர் ஆர்வலர் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2019-ம் ஆண்டில், தேசத் துரோகத்திற்காக விசாரிக்கப்பட்ட அரசியல்வாதிகளில், அப்போதைய நிதியமைச்சர் லிம் குவான் எங் மற்றும் அம்னோவின் பாடாங் ரெங்காஸ் எம்.பி. நஸ்ரி அஸிஸ் இருவரும் அடங்குவர்.
அதேசமயம், 2020-ல் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமே தேசத் துரோகத்திற்காக விசாரிக்கப்பட்டனர்.
தேசியக் கூட்டணி அரசாங்கம், தேசத் துரோகச் சட்டத்தை இரத்து செய்யாது என்று கூறியுள்ளது.