‘மலத்தை வீசிவிட்டு கையை மறைக்கின்றனர்’

விமர்சனம் | இது அழுக்கு அரசியல் இல்லையென்றால் வேறு என்ன? அல்லது மத்தியத்தில் இருக்கும் அம்னோ தலைவர்கள் – மறைமுகமாக – மாநிலங்களில் தங்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த முடியாதத் தங்கள் இயலாமையை ஒப்புக்கொள்கிறார்களா?

மாநில அம்னோ தலைவர்கள், இனி கோலாலம்பூரில் உள்ள தங்கள் முதலாளிகளை மதிக்காமல், கடந்த வெள்ளிக்கிழமை பேராக்கில் செய்ததைப் போல அவர்கள் விரும்பியபடி செயல்படுவார்களா?

முன்னாள் மந்திரி பெசார் அஹ்மத் ஃபைசல் அஸுமு மீது, அம்னோவின் அதிருப்தி ஒன்றும் புதிதல்ல என்பதால் தவறுதலாக நடந்தது என்பதை நம்புவது கடினம்.

அம்னோ அதிகமானப் பதவி பசியில் இருக்கிறது என்பதும் இரகசியமல்ல.

தேசிய முன்னனி (அம்னோ), பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவற்றின் கூட்டு அறிக்கையின் உள்ளடக்கம் மற்றும் தொனியில் இருந்து, அம்னோ ‘மலத்தை வீசிவிட்டு கைகளை மறைக்கிறது’ என்பது தெளிவாகிறது.

பெர்சத்து மற்றும் பாஸ் அம்னோவின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள தலையாட்டி பொம்மைகளாக மாறியுள்ள, ஏனெனில் அம்னோ இல்லாமல் அவர்கள் பேராக்கில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

தவறு நடந்துவிட்டது என்று மன்னிப்பு கேட்பதன் வழி, மலாய்-முஸ்லிம்கள் என்ற முத்திரையில் வெறி கொண்ட மலாய்க்காரர்களைத் தொடர்ந்து முட்டாள்களாக வைத்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அவர்களின் நடவடிக்கைகள் ‘மலத்தை வீசிவிட்டு கைகளை மறைக்கும்’ செயலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, காரணம் அந்த அசுத்தமான கைகளில் துர்நாற்றம் வீசிக்கொண்டுதான் இருக்கும்.

மறுபுறம், பெர்சத்து, அவமதிப்புடன் வெளியேற்றப்பட்ட தனது பிரதிநிதிக்குப் பதிலாக, ஓர் அம்னோ சட்டமன்ற உறுப்பினரை மந்திரி பெசார் வேட்பாளராக ஏற்றுக்கொள்வது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

இதன் மூலம், பெர்சத்து பக்காத்தான் ஹராப்பானில் இருந்து விலகியதற்கும், அம்னோ மற்றும் பாஸ்-உடன் இணைந்து பின் கதவு அரசாங்கத்தை உருவாக்கியதற்குமான சான்றுகளை இன்னும் வலுவடையச் செய்துள்ளது.

அம்னோ, பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவற்றின் முன்மொழிவு பேராக் சுல்தானால் அங்கீகரிக்கப்பட்டால், பெர்சத்து தலைமைத்துவத்தின் கீழ் இருந்த அனைத்து மாநிலங்களையும் – பி.எச். மூலம் வென்ற – அம்னோ மற்றும் பாஸ் கூட்டணியிடம் ஒப்படைக்கும் இலக்கு நிறைவடையும்.

பெர்சத்துவை, அம்னோவின் வாரிசாக வலுப்படுத்த வேண்டுமென்ற முஹைடின் யாசின், ஹம்சா ஜைனுதீன் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் சிறந்த திட்டம் நிறைவேறிவருகிறது.


கதீர் ஜாசின் , மூத்தப் பத்திரிகையாளர், டாக்டர் மகாதீர் முகமது பிரதமராக இருந்தபோது அவரின் ஊடக ஆலோசகராக இருந்தவர் & பெர்சத்து கட்சியின் உச்சமன்றத் தலைமைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர்.