சாலையில் இருக்கும் குழிகளை மேம்படுத்த, கோல லங்காட் பொதுப்பணித் துறைக்கு (ஜே.கே.ஆர்) ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் நிதி அமைச்சை வலியுறுத்தினார்.
“[…] ஜே.கே.ஆர். கோல லங்காட் நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளது, காரணம் தேவையான பல ஒதுக்கீடுகளை நிதி அமைச்சு அங்கீகரிக்கவில்லை, குறிப்பாக கூட்டாட்சி சாலைகளைப் பராமரித்தல்.
“எனவே, கோலா லங்காட் ஜே.கே.ஆர்.-ஐ விமர்சிக்க நான் விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் ஒதுக்கீடுகள் இல்லாததால் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
“நிதி அமைச்சுதான் உண்மையில் பொறுப்பை ஏற்க வேண்டும், ஏனென்றால் அவர்கள்தான் இறுதி முடிவை எடுப்பார்கள்,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
சிலாங்கூர், பந்திங், ஜாலான் கம்புங் ஸ்ரீ சீடிங்கில், சாலையில் இருந்த குழியில், சைக்கிள் ஓட்டும்போது விழுந்ததில், நேற்று அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் முகத்தில் காயம் ஏற்பட்டது.
அதற்காக, கோல லங்காட் ஜே.கே.ஆர். தனது கீச்சகத்தின் வழி மன்னிப்பு கோரியதுடன், பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக செயல்படுவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.