தாய்மொழிப் பள்ளிகளும் அரசமைப்புச் சட்டமும் – கி.சீலதாஸ்

மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன்னமே தாய்மொழிப் பள்ளிக்கூடங்களைப் பற்றிய விவாதம் ஆரம்பித்துவிட்டது. அதற்கு முன்பு தாய்மொழிப் பள்ளிகள் இயங்குவதைக் காலனி அரசு தடுக்கவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னரும் அந்த அமைப்புகளின் மீது தடை ஏதும் இருந்ததில்லை. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு, தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் இயங்குவதற்கான எல்லா வசதிகளையும், கட்டுப்பாடுகளையும் நடுவன் அரசின் கல்வி அமைச்சு பொறுப்பிலிருந்து வருகிறது.

சுதந்திரப் பேச்சுவார்த்தை நடந்தபோது அன்றைய கூட்டணி கட்சி – அதாவது அம்னோ, மசீச, மஇகா ஒன்றாக இணைந்து தங்களின் கோரிக்கைகளை ரீட் ஆணையத்தில் சமர்ப்பித்தது. அதில் கல்வி குறித்த திட்டங்களும், பல மொழிகளின் பாதுகாப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. கூட்டணி கட்சியில் இணைந்திருந்த நிலைப்பாடு எப்படி இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கவில்லை அல்லது அவை அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது என்ற கூற்று ஏற்புடையது அல்ல. அரசமைப்புச் சட்டத்தின் 152ஆம் பிரிவு மலாய் மொழியே தேசிய மொழியென உறுதியாகக் கூறிவிட்டது. அதே மூச்சில் எவரும் தம் மொழியைப் பயிலவோ, கற்பிக்கவோ தடை ஏதும் இருக்காது. ஆனால், அரசு தொடர்பான காரியங்களில் அவை பயன்படுத்த இயலாது, மலாய் மொழியைத் தவிர என்று குறிப்பிட்டிருப்பது தமிழ், சீனம் ஆகிய மொழிகளின் பாதுகாப்பை விளக்குகிறது; உறுதிப்படுத்துகிறது. காலங்காலமாக சீனமும் தமிழும்தான் பள்ளிக்கூடங்களைக் கண்டிருந்தன.

நமது அரசமைப்புச் சட்டம் வடிவம் பெற்றுக்கொண்டிருந்தபோது மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் சமர்ப்பித்த ஒரு குறிப்பில், “மற்றவர்களின் மொழியை அவர்கள் கற்றுக்கொள்ளவும், தங்களின் சொந்த பள்ளிகளில் அவர்களின் மொழி கற்பிக்கப்படுவதை, அவர்களின் சொந்த விவகாரங்களில், தொழில்களில் புறக்கணித்தால் அது தற்கொலைக்கு ஒப்பாகும். இந்தப் பல்லின மக்கள் வாழும் நாட்டில் மற்றவர்கள் தங்களின் மொழியைப் பயன்படுத்துவது மென்மை நிலையாகும். மலாய் மொழி பிரதான மொழியாகவும் தேசிய மொழியாகவும் நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதே வேளையில் மற்றவர்களின் மொழிகள், எழுத்துக்கள், கலாச்சாரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதால், நாம் சரியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்றார்.

1.5.1955ஆம் தேதியில் எழுதப்பட்ட இந்தக் குறிப்பில், வெளியிடப்பட்ட கருத்துதான் அரசமைப்புச் சட்டத்தின் 152ஆம் பிரிவில் காண முடிகிறது என்றால் பொருந்தும். சுதந்திரத்துக்கு முன்னர் அம்னோ மட்டும் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சுதந்திரம் பெற்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். காலனி அரசு ஆரம்பத்தில் அம்னோவுடன் பலத்த தொடர்பை ஏற்படுத்திக்கொண்டபோதிலும் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மலாயாவில் வாழும் எல்லா இனத்தவர்களின் ஒப்புதல் குறிப்பாக சிறுபான்மையினரின் பாதுகாப்பு போன்றவற்றிற்குத் திருப்திகரமான ஏற்பாடு வேண்டும் என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டதும் அம்னோ பிற இனங்களோடு ஒத்துப்போகும். கொள்கையை ஏற்றுக்கொண்டபோதிலும் அந்தக் கட்சியிலிருந்த அம்னோ தீவிரவாதிகள் சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறிப்பாக, மொழி, கலாச்சார விஷயங்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவு.

சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை வடிவுபெற்றபோது எல்லா இனங்களும் இணைந்து வரவேண்டும் என்ற பிரிட்டனின் நிபந்தனை அல்லது அறிவுரை, சிறுபான்மையினரின் பாதுகாப்பு, அவர்களின் மொழிகள், கலாச்சாரங்களின் பாதுகாப்பு யாவும் சிந்திக்க வேண்டியிருந்தது. அப்போது நிலவிய சமுதாய நிலையைப் பார்க்கும்போது சமரசம் தேவைப்பட்டது. சமரசத்துக்கு அடிப்படையே சிறுபான்மையினரின் மொழி, காலாச்சாரம் பாதுகாப்பு. அந்தப் பாதுகாப்பை நல்க முன்வைத்தனர் அன்றைய அம்னோ தலைவர்கள். அவர்களில், துங்கு அப்துல் நஹ்மான், ரசாக், துன் டாக்டர் இஸ்மாயில் போன்றோர் அடங்குவர். அந்தத் தலைவர்கள் உடன்பட்டது எதற்கு? எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும். எல்லோருடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகக் கருதினர்.

ஒரு வகையில் அரசமைப்புச் சட்டதின் 152 ஆம் பிரிவு தாய்மொழிப் பள்ளிக்கூடங்களும் அரசமைப்புச் சட்டத்தின் அங்கீகாரம் உண்டு என்றே சொல்ல வேண்டும். சுதந்திரத்துக்குப் பின்னும் அரசு தாய்மொழிப் பள்ளிக்கூடங்களுக்கான, கல்விக்கான செலவுத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு வந்ததானது அரசமைப்புச் சட்டம் தந்த பாதுகாப்பை மதிக்கும் செயல் எனலாம். அதில் மாற்றம் காண நினைப்பது அரசியல் துரோகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதே சமயத்தில் அறுபத்து மூன்று ஆண்டுகளாக அமலில் இருக்கும் தாய்மொழிப் பள்ளிகளை மூடவேண்டும் அல்லது அவை அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானவை என்கின்ற கருத்து இன ஒற்றுமையை விரும்பாதவர்களின் இனப்பகைமையைச் சீண்டிவிடும் செயல் என்றாலும் தகும். தாய்மொழிப் பள்ளிகள் சிறுபான்மையினரின் உரிமைக்காக, மொழிக்காக, கலாச்சாரத்துக்காகத் தங்களின் அடையாளத்தை நிலைநிறுத்த உதவும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. கல்வியாளர்களும் சமுதாய சிந்தனையாளர்களும் தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்; ஏனெனில் தாய்மொழி நிச்சயமாக அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்ற நிலைபாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.

நம் தமிழ் சமுதாயமும் ஒரு உண்மையை உணர வேண்டும். அவர்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆதரவு தராவிட்டால், பிறர் மீது பழி போடுவதில் பயனிருக்காது. ஒரு வேளை, தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட்டு இப்பொழுது வழக்கில் இருக்கும் தேசிய மாதிரி பள்ளிகளில் சிறுபான்மையினர் சேர்க்கப்பட்டால், இக்காலகட்டத்தில் காணப்பெறும் பிளவு மனப்பான்மை தொடராது என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? சிறுபான்மையினர் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பதற்குத் துணையாக இருப்பது அவர்களின் சரிசமமான குடிமக்கள் என்ற அங்கீகாரம்தான். இந்த அங்கீகாரம் அவர்களின் மொழியை, கலாச்சாரத்தைப் பாதுகாக்கும். இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகாரம் மறுக்கப்பட்டால் அவர்களின் மொழி, கலாச்சாரம், சமயம் அனைத்தும் பட்டுவிடும். இதை மலாயா, பிறகு மலேசியா உருவாக்க வழிவகுத்தவர்களின் நோக்கம் அல்ல. இதைப் புரிந்துகொள்வதே விவேகமான அணுகுமுறை.