செந்தர இயங்குதல் நடைமுறைக்கு (எஸ்ஓபி) இணங்காமல், பிடிவாதமாக இருக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களைக் கட்டாயக் கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்தப்படுத்த மறுக்கும் முதலாளிகளுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் அபாயம் உள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், முதலாளிகளுக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.
கிள்ளானில் உள்ள ஓர் இரப்பர் கையுறை தொழிற்சாலை SOP கோவிட் -19 எஸ்.ஓ.பி.-யை மீறியதற்காக, RM1,000 மட்டுமே தண்டம் விதிக்கப்பட்டதன் காரணமாக, அரசாங்கம் விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறினார்.
“ஒரு தொழில்துறை தொழிற்சாலைக்கு RM1,000 தண்டம் விதிக்கப்பட்ட செய்தி மக்களைக் கோபப்படுத்தியுள்ளது, வழக்கு மிகவும் பெரியது, ஆனால் தண்டம் RM1,000 மட்டுமே,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988 கீழ், குற்றங்களைச் செய்யும் முதலாளிகளுக்கு அதிகபட்சமாக RM1,000 தண்டம் விதிக்க அனுமதிக்கிறது என்று இஸ்மாயில் மீண்டும் விளக்கினார்.
“நாம் RM10,000 வரையில் தண்டத்தை உயர்த்த விரும்பினால், அதுவும் முடியும், ஆனால் இந்தச் சட்டம் திருத்தப்பட நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
நாங்கள் சுகாதார அமைச்சுக்கு ஒரு தேர்வை வழங்கியுள்ளோம், இந்த முதலாளிகளுக்குத் தண்டம் விதிக்காமல், நேரடியாக நீதிமன்றத்திற்குக் கொண்டு வர முடியும்.
“எனவே, ஆய்வு செய்வதற்கான அட்டவணையை மனிதவள அமைச்சு முதலாளிகளுக்காகத் தயாரித்துள்ளதால், முதலாளிகள் மனிதவள அமைச்சுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன்,” என்று அவர் விளக்கினார்.
1.7 மில்லியன் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கோவிட் -19 கட்டாயத் திரையிடல் சோதனை, டிசம்பர் 1 முதல் மூன்று மாநிலங்கள் மற்றும் இரண்டு கூட்டாட்சி பிரதேசங்களில் நடைமுறைக்கு வந்தது, அதாவது சிலாங்கூர், பினாங்கு, சபா, கோலாலம்பூர் மற்றும் லாபுவான் அதில் அடங்கும்.
இதுவரை மொத்தம் 34,903 முதலாளிகள், 821,127 வெளிநாட்டு தொழிலாளர்களைச் சோதனைக்கு அனுப்பியுள்ளதாகக் கூறிய இஸ்மாயில் சப்ரி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த முதலாளிகளையும் இதைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.