ஜிஎஸ்டி-யை அகற்றியது தேசிய வருமானத்தைப் பாதித்தது – இரஹீம் பக்ரி

பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அகற்றுவதற்கான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முடிவு நாட்டின் வருமானத்தை ஓரளவு பாதித்துள்ளது.

துணை நிதியமைச்சர் 1, அப்துல் இரஹீம் பக்ரி கூறுகையில், அவ்வரி ஒழிக்கப்பட்டு, விற்பனை மற்றும் சேவை வரிக்கு (எஸ்எஸ்டி) மாற்றப்பட்டபோது, நாட்டின் வருவாய் குறைந்தது.

“ஜிஎஸ்டி 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்டது, இது 2018-ல் அப்போதைய அரசாங்கம்  (ஜிஎஸ்டி) அகற்ற முடிவெடுத்தது.

“தரவுகளைப் பார்க்கும்போது, ​​ஜிஎஸ்டி வரி வசூல் ஆண்டுக்கு RM44 பில்லியன், அது செயலில் இருந்தபோது நாட்டுக்கு மொத்தம் RM133.1 பில்லியன் வருவாய் வந்தது, அதே நேரத்தில் எஸ்.எஸ்.டி. வரி ஆண்டுக்கு RM21 பில்லியன் மட்டுமே,” என்று அவர் கூறினார்.

இன்று மக்களவையில், விற்பனை வரி (திருத்த) மசோதா 2020-ஐ நிறைவு செய்யும்போது அவர் இவ்வாறு கூறினார்.

ஜிஎஸ்டி வரி விரிவான வகையில் வசூலிக்கப்படுவதால், அது பெரிய அளவிலான வரி முறையாகும், இது அனைத்து மட்டங்களிலும் பொருள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்டது, எஸ்எஸ்டி ஒரு அடுக்கு வரி, அது பொதுவாக உற்பத்தியாளர்கள் மீது மட்டுமே விதிக்கப்படுகிறது.

“ஜிஎஸ்டி-யின் கீழ், சுமார் 597,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் (இந்த வரி முறையைப் பயன்படுத்தி), ஆனால் எஸ்எஸ்டி-யில் 46,519 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

“… ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் பொருட்கள் 12,000 வகையானவை, ஆனால் எஸ்எஸ்டி வரி 6,000 பொருட்கள் மீது மட்டுமே,” என்று அவர் கூறினார்.

ஜிஎஸ்டி அமல்படுத்தலின் போது பலவீனங்கள் இருந்ததையும், மக்களை மறைமுகமாக அது பாதித்ததையும் அப்துல் ரஹீம் ஒப்புக் கொண்டார்.

மீண்டும் ஜிஎஸ்டியை அமல்படுத்துவதற்கு முன், மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஏற்றுக்கொள்வதை அரசாங்கம் கவனிக்கும் என்றார் அவர்.

  • பெர்னாமா