ஹிண்ராஃப் பதிவு இரத்து, ஆர்.ஓ.எஸ்.-க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

தனது பதிவை இரத்து செய்ய, உள்துறை அமைச்சர் மற்றும் சங்கங்களின் பதிவு இலாகா (ஆர்.ஓ.எஸ்.) எடுத்த முடிவுக்குச் சவால் விடுத்து, இந்து உரிமைகள் நடவடிக்கை முன்னணி (ஹிண்ராஃப்) நீதித்துறை மறுஆய்வு செய்துள்ளது.

இந்த நடவடிக்கையில் விண்ணப்பத்தாரராக, பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் பி வேதமூர்த்தி செயல்படுவதை, மலேசியாகினி இன்று ஒரு காரண அறிக்கையில் கண்டது.

நீதிமன்ற ஆவணங்களில், பிரதிவாதிகளாகப் பெயரிடப்படாத ஆர்.ஓ.எஸ். தலைமை இயக்குநர் மற்றும் உள்துறை அமைச்சர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரரின் சட்டப் பிரதிநிதிகள், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நீதி மறுஆய்வு விண்ணப்பத்தை டிசம்பர் 22-ம் தேதி தாக்கல் செய்தனர்.

அமைப்பின் பதிவு நீக்கம் தொடர்பான இரண்டு முடிவுகளின் செல்லுபடியை ஹிண்ராஃப் சவால் செய்கிறது.

முதலாவது, ஆர்.ஓ.எஸ். தலைமை இயக்குநர் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று, அவர்களின் பதிவை இரத்து செய்ய எடுத்த முடிவு. இரண்டாவதாக, அம்முடிவை ஆதரிக்க இவ்வாண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி, உள்துறை அமைச்சர் எடுத்த முடிவு.

ஆர்.ஓ.எஸ். தலைமை இயக்குநரின் இந்த முடிவு, சங்கச் சட்டம் 1966-ஐ மீறியுள்ளதாக ஹிண்ராஃப் கூறியுள்ளது.

இந்த முடிவை இரத்து செய்து, மீண்டும் பதிவு செய்ய ஆர்.ஓ.எஸ். தலைமை இயக்குநர் மற்றும் அமைச்சருக்கு உத்தரவிடுமாறு ஹிண்ராஃப் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது.

நீதித்துறை மறுஆய்வு, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி மரியானா யஹ்யா முன்னிலையில், அடுத்தாண்டு பிப்ரவரி 22-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.