முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட் உட்பட, கூட்டணியின் கொள்கைகளைக் கடைபிடித்து, இணைந்து வேலை செய்ய விரும்பும் எந்தத் தரப்புக்கும் அழைப்பு கொடுக்க பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தயாராக உள்ளது.
ஆனால், அழைக்கப்படும் தரப்பினர் அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை கொண்டு, கூட்டணியைச் சேதப்படுத்தும் எண்ணத்தோடு வரக்கூடாது என்று பி.எச். தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறினார்.
“அதை நான் பி.எச்.-இடம் விட்டு விடுகிறேன். யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் கொள்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்,” என்று அவர் இன்று ஒரு புத்தக அறிமுக விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
டாக்டர் மகாதீரின் நாட்டை வழிநடத்த விரும்புவதைப் பற்றி அன்வரிடம், கேட்டபோது, இந்தக் கேள்வி இனி பொருந்தாது என்றும், பிரதமராக விரும்பும் எவரும் சீர்திருத்தங்களையும் நல்லாட்சியையும் செயல்படுத்த வேண்டும் என்ற உறுதியைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் விவரித்தார்.
“என்னைப் பொறுத்தவரை இக்கேள்வி பொருத்தமற்றது … யார், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், ஊழலை எதிர்த்துப் போராடுவதோடு, தன் குடும்பங்களையும் நண்பர்களையும் பாதுகாக்கும் எண்ணத்தைக் கொண்டு இயங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
“கிராமப்புற, ஓரங்கட்டப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஏழைகளின் துன்பங்களுக்கு எதிராகப் போராடவும் உதவவும் அவர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.