கோவிட் 19 : 1,870 புதிய நேர்வுகள், 8 புதியத் திரளைகள், ஜொகூரில் அதிக பாதிப்புகள்

இன்று, நாட்டில் 1,870 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவானதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

முதன்முறையாக, ஜொகூர் இன்று 607 வழக்குகள் அல்லது 32.5 விழுக்காடு புதிய நேர்வுகளுடன் மற்ற மாநிலங்களில் இருந்து முன்னிலை வகிக்கிறது.

“ஜொகூரில் நேர்வுகளின் அதிகரிப்புக்குச் சிறைச்சாலை தொடர்பான தெம்போக் சோ திரளை காரணமாகும். அங்கு 374 நேர்வுகள் அல்லது மொத்த நேர்வுகளில் 61.6 விழுக்காடு என்று பதிவாகியுள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, சிலாங்கூர் 472 நேர்வுகள் (25.2 %), சபா 280 (15 %), கோலாலம்பூர் 219 நேர்வுகள் பதிவாகியுள்ளன.

பிற மாநிலங்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை பின்வருமாறு: – பினாங்கு (69), கிளந்தான் (56), பேராக் (48), பஹாங் (48), நெகிரி செம்பிலான் (34), கெடா (23), மலாக்கா (8), திரெங்கானு மற்றும் லாபுவான் தலா (2), சரவாக் மற்றும் புத்ராஜெயா தலா(1).

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இன்று, 745 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 62 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இன்று, சபாவில் 4 மரணங்களும், சுங்கை பூலோ மற்றும் குளுவாங்கில் தலா 1 மரணமும் பதிவாகியுள்ளது.

மேலும் இன்று, 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

ஜாலான் ஸ்டேஷன் கட்டுமானத்தளத் திரளை – கோலாலம்பூர்; தெம்போக் ச்சோ திரளை – ஜொகூர்; ஜாலான் புரோகா கட்டுமானத்தளத் திரளை – சிலாங்கூர்; ஜாலான் நிக்கோலஸ் திரளை – கோலாலம்பூர்; ஸ்லோட் பெர்ஜாயா திரளை – கோலாலம்பூர்; ஆலோர் திரளை – கெடா; கெர்பாங் பொங்சு திரளை – பேராக்; டாமாய் கெத்தாரி திரளை – பஹாங்.