மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் ‘RM200,000 தொகையைத் திரட்டும் இலக்கை அடைந்தால், தலையை மொட்டையடிப்பேன்’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.
28 வயதான அந்த எம்.பி., நேற்றிரவு 7 மணி அளவில் RM383,000 வசூலானதன் மூலம் தனது இலக்கை மீறிவிட்டார்.
‘1 குடும்பம் 1 மடிக்கணினி’ பிரச்சாரத்தின் வழி திரட்டப்பட்ட அந்நிதி, மூவாரில் உள்ள பின்தங்கிய மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்க பயன்படுத்தப்படும்.
சதிக்கின் தாயார், ஷரீஃபா மஹானி சைட் அப்துல் அஜீஸ், தனது மகனின் தலைமுடியை வழித்த நிகழ்ச்சி, ஆஸ்ட்ரோ அவானியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
“கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், அம்மா தேங்காய் எண்ணெயைத் தேய்த்து உன் முடியை வளர்த்தேன், இப்போது நீ வழுக்கை ஆக விரும்புகிறாய், பரவாயில்லை, மக்களுக்காக…. போராடு மகனே, மக்களுக்காக,” என்று அவர் கூறினார்.
‘மூடா’ கட்சியின் நிறுவனரான சதிக்: “அனுதாபம் கொள்ள வேண்டாம், இது ஒரு நல்ல காரியத்திற்காக,” என்று கூறினார்
பிரச்சாரம் பற்றி கருத்து தெரிவித்த சதிக், மடிக்கணினி தேவைப்படும் 60 குடும்பங்களைக் கண்டறிந்து, அவற்றைக் கொடுக்கவுள்ளதாகக் கூறினார்.
அவை தரம் குறைந்த மடிக்கணினி அல்ல, தரமான என்றும் அவர் சொன்னார்.
“நாங்கள் உயர் தரமான மடிக்கணினிகளை, i3 அல்லது i5 செயலிகளுடன் வழங்குகிறோம், இது எனது சொந்த கணினியை விட சிறந்தது.
“எனவே, மாணவர்கள் அதை நீண்ட காலம் பயன்படுத்தலாம்,” என்றும் அவர் சொன்னார்.
டிசம்பர் 26-ம் தேதி, சைட் சதிக் ஐந்து நாட்களில் RM200,000 திரட்டுவதற்கான பிரச்சாரத்தை அறிவித்தார், 24 மணி நேரத்திற்குள் அவரால் RM61,000 திரட்ட முடிந்தது.
“இது மலேசியர்களைக் காட்டுகிறது, அவர்கள் உதவ விரும்பினால், கட்டாயம் அதை செய்வார்கள், நன்கொடையாளர்கள் அனைவரும் மூவாரைச் சேர்ந்தவர்கள் அல்ல, என்றாலும் அதைச் செய்தார்கள்.
“மலேசியர்களால் அசாதாரணமான ஒன்றைச் செய்ய முடியும் என்பதை இது காட்டுகிறது.
“இது அவர்களின் வெற்றி, என்னுடையது அல்ல, அவர்களின் உத்வேகத்திற்கான ஒரு வாகனம் மட்டுமே நான்,” என்று அவர் கூறினார்.