இ.பி.எஃப். தொகையைத் திரும்பப் பெறுவது : ‘தங்க முட்டையிடும் வாத்துகளைக் கொல்லாதீர்கள்’ – கதிர்

தொழிலாளர் சேமநிதியில் (இபிஎஃப்) இருந்து பெரும் தொகையை வெளியாக்க அனுமதிக்க வேண்டுமென அம்னோ வலியுறுத்தியது, இறுதியில் இது பங்களிப்பாளர்களைப் பாதிக்கும் என்று மூத்தப் பத்திரிகையாளர் அப்துல் கதிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

“பிரபலத்தை விரும்பும் சிலர் பரிந்துரைத்தபடி, இபிஎஃப் பங்களிப்பாளர்கள் தங்கள் சேமிப்பை விருப்பப்படி திரும்பப் பெற அனுமதித்தால், அந்த ஓய்வூதிய நிதியம் தனது பங்குதாரர்களுக்குப் பணத்தைச் செலுத்த பில்லியன் கணக்கான தனது சொத்துகளை விற்க வேண்டி வரும்.

“இது பங்கு விலையைக் குறைத்து, அதன் சொத்துக்களை நஷ்டத்தில் விற்க கட்டாயப்படுத்தும்.

“காலப்போக்கில், மீதமுள்ள பங்களிப்பாளர்களுக்கு நல்லதொரு வருமானத்தை ஈட்டுவதற்கு, அவர்கலிடம் போதுமான மூலதனம் இல்லாமல் போகும். இதுபோன்ற சூழ்நிலைகளால்தான் பல ஓய்வூதிய நிதிகள் உலகளவில் திவாலாகின்றன,” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

“துரதிர்ஷ்டவசமாக பல மலேசியர்கள் இதனை அறியாதவர்களாக இருக்கின்றனர் அல்லது சிந்திக்க மிகவும் சோம்பல்படுகின்றனர், இதனால் பொய்யர்களும் நயவஞ்சகர்களும் அவர்களைத் தவறாக வழிநடத்த வாய்ப்பு உள்ளது,” என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களிலும் அம்னோ தலைவர்கள், இ.பி.எஃப்-க்கு தீங்கு விளைவிக்கும் முடிவுகளை எடுத்ததாக அவர் கூறினார்.

எடுத்துக்காட்டாக, முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மத் படாவி காலத்தில், நிதி அமைச்சுக்குச் சொந்தமான பெம்பினான் பி.எஃப்.ஐ. பெர்ஹாட்டுக்கு இ.பி.எஃப். 25.29 பில்லியன் ரிங்கிட் கடனை வழங்கியது என்று அவர் கூறினார்.

“0.5 விழுக்காடு வட்டி மட்டுமே செலுத்தப்படும் போது, இபிஎஃப் பங்களிப்பாளர்கள் இந்தக் கடனில் இருந்து பயனடைவார்கள் என்று நாம் எவ்வாறு எதிர்பார்ப்பது?

“மேலும் கடன் காலம் ஐந்து முதல் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – 2027-ஆம் ஆண்டு முடிவடைகிறது – ஒரு நாடாளுமன்ற அறிக்கையின்படி,” என்று அவர் கூறினார்.

வங்கி பங்குகள் குறைந்து வருகின்றன

அப்துல்லாவின் வாரிசான நஜிப் ரசாக், பதவியிலிருந்து வெளியேறியபோது, 1எம்.டி.பி நிறுவனத்திடம் RM50 பில்லியனுக்கும் அதிகமான கடன், சர்வதேசப் பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டிருந்ததையும் அவர் காட்டினார்.

முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட அப்பணத்தில் RM3.95 பில்லியன் ஓய்வூதிய நிதியத்தால், 1எம்.டி.பி.-இன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு, இபிஎஃப் 5.45 விழுக்காடு ஈவுத்தொகையை மட்டுமே வழங்கியது, இது 2008 நிதி நெருக்கடிக்குப் பின்னர் மிகக் குறைவானது.

வரலாற்றில் மிகக் குறைந்த ஈவுத்தொகை, கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அமானா சஹாம் பூமிபுத்ரா (ஏஎஸ்பி), பங்களிப்பாளர்களுக்கு 5 விழுக்காடு மட்டுமே; 2020-ஆம் ஆண்டிற்கான இபிஎஃப் ஈவுத்தொகைக்கு இது ஒரு நல்ல அறிகுறி அல்ல, இது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்படும்.

மேலும், ஏராளமான அரசு நிதிகள் வங்கித் துறையில் முதலீடு செய்யப்பட்டு, நல்ல ஈவுத்தொகையைப் பெற அவர்களின் இலாபத்தைச் சார்ந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பொதுமக்களுக்கு உதவ தேசியக் கூட்டணி அரசாங்கம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு தளர்வு கொடுத்தது, ஆனால் பின்னர் அம்னோவின் அழுத்தம் காரணமாக பலவகை சலுகைகள் கடன் வாங்கியவர்களுக்காக நீட்டிக்கப்பட்டது.

“இதனால், பங்குகள் மற்றும் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள். தடை விதிமுறை நடைமுறைக்கு வந்ததிலிருந்து வங்கி பங்குகளின் விலைகள் குறைந்துவிட்டன.

“வங்கிகள் புர்சா மலேசியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக இலாபகரமான கவுண்டர்கள், மேலும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (ஜி.எல்.ஐ.சி) அவற்றின் முக்கிய முதலீட்டாளர்கள் ஆகும்.

“இலாபங்கள் மற்றும் சந்தை மூலதனத்தில் வங்கிகளால் ஏற்படும் இழப்புகள் ஜி.எல்.ஐ.சி. இலாபங்களான இ.பி.எஃப், பெர்படானான் நேஷனல் பெர்ஹாட், கஸானா, கே.டபிள்யூ.ஏ.பி, தாபோங் ஹஜி மற்றும் லெம்பாகா தாபோங் அங்காத்தான் பெர்சென்ஜாத்தா (எல்.டி.ஏ.டி) ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

பங்களிப்பாளர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்புக்காக நிதியை நம்பியிருக்கும்போது, இபிஎஃப் பாதிக்கப்படக்கூடாது என்று கதிர் வலியுறுத்தினார்.

“தங்க முட்டையிடும் வாத்துகளைக் கொல்ல வேண்டாம்,” என்று அவர் கூறினார்.