தேசிய உயர்க்கல்வி நிதிக் கழகத்தின் (பி.டி.பி.டி.என்) கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட கடனாளிகளுக்கு மட்டுமே அந்தச் சலுகை வழங்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் நோராய்னி அகமது இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
கோவிட் -19 தொற்றுநோயால் கடனாளிகளில் சிலர் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்பதையும் அரசாங்கம் அறிந்திருப்பதாக நோராய்னி கூறினார்.
இருப்பினும், அதன் நிபந்தனைகளையும் நெகிழ்வுத்தன்மையையும் பற்றிய கூடுதல் விவரங்களை பிடிபிடிஎன் வழங்கவில்லை.
பாதிக்கப்பட்ட கடனாளிகள் ஜனவரி 5 முதல் மார்ச் 31 வரை பிடிபிடிஎன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்றும், ஒத்திவைப்புக் காலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேதியிலிருந்து தொடங்கும் என்றும் நோராய்னி கூறினார்.
மேலதிக விவரங்களுக்கு கடனாளிகள் பிடிபிடிஎன் உதவியலைக்கு 03-2193 3000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நோராய்னி கேட்டுக் கொண்டார்; இச்சேவை திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் 5 மணி வரை செயல்படுகிறது.