ஜொகூரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும், நிறுத்தப்பட்ட கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்.எஸ்.ஆர்.) திட்டத்திற்குப் பதிலாக மற்றொரு போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது,
ஜொகூர் எதிர்க்கட்சி பிரதிநிதிகள், ஓர் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வலையமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம், விரைவில் ஜொகூர் மந்திரி பெசார் ஹஸ்னி முகமதுவிடம் சமர்ப்பிக்கப்படும், இது மாநில மக்களின் நல்வாழ்வுக்கானது எனக் கூறினர்.
மலேசியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் RM134 பில்லியன் பங்களிப்பு செய்ததில் ஜொகூர் மாநிலம் நான்காவது பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது. இருப்பினும், போக்குவரத்து உள்கட்டமைப்பு பொருளாதாரப் பங்களிப்பை செய்யவில்லை.
இந்த அறிக்கையை சட்டமன்ற உறுப்பினர்கள் தான் ஹொங் பின் (ஸ்கூடாய்), சியூ சோங் சின் (மெங்கிபோல்), இயோ துங் சியோங் (பெக்கான் நெனாஸ்), ங் யாக் ஹோவ் (பெந்தாயான்) மற்றும் கன் பெக் செங் (பெங்காராம்) ஆகியோர் டிஏபி-யைப் பிரதிநிதித்து வெளியிட்டுள்ளனர்.
சிங்கப்பூரை ஈடுபடுத்தாமல், ஜொகூர் பாருவில் முடிவடையும் எச்.எஸ்.ஆர். திட்டத்தை மறுசீரமைப்பது எந்தவொரு பிராந்தியப் பொருளாதார முறையீடும், தாக்கமும் இல்லாமல், வெறும் வெள்ளை யானையாக மட்டுமே இருக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.
அவர்களைப் பொறுத்தவரை, எச்.எஸ்.ஆர். திட்டத்தின் முக்கிய ஈர்ப்பு ஓர் ஒருங்கிணைந்த எல்லை அனுமதி முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து நேரத்தை மிச்சப்படுத்துவதாகும்.
இதற்கிடையில், முன்னாள் ஜொகூர் மந்திரி பெசார் மொஹமட் கலீத் நோர்டின், மேற்குக் கடற்கரையில் எச்.எஸ்.ஆர். சீரமைப்புகளாக முன்மொழியப்பட்ட பகுதிகளை மேம்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார்.
“இந்தோனேசியா, குறிப்பாக டுமாயில், மலாக்கா நீரிணை சார்ந்தப் பகுதிகளை மேம்படுத்தி வருகிறது, எனவே மலேசியாவும் அதற்கு ஈடாகப் போட்டியிட வேண்டும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளின் வளர்ச்சி ஏற்கனவே நிறைவுற்றுவிட்டதால், இந்த நடவடிக்கை மறைமுகமாக உயர்ப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என்றார் அவர்.
இந்தத் திட்டம் இரத்து செய்யப்பட்டதன் காரணங்களை அரசாங்கம் வெளியிடும் என்று நம்புவதாகக் கலீத் கூறினார்.
- பெர்னாமா