முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமை விமர்சிப்பதை அல்லது தாக்குவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க “வலுவான மற்றும் உறுதியான” பெரும்பான்மை இருப்பதாகக் கூறப்படுவதை நிரூபிக்கத் தவறியது உட்பட, அன்வரை விமர்சித்து மகாதீர் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, அமானா இளைஞர் அணி தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின் நேற்று இக்கோரிக்கையை விடுத்தார்.
இந்த அறிக்கை நிலைமையை இன்னும் மோசமாக்குவதாக விவரித்த ஷஸ்னி, அதற்குப் பதிலாக மகாதீர் எதிர்க்கட்சியின் மாபெரும் கூட்டணி
மீது கவனம் செலுத்த வேண்டும், அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளின் உடன்பாடும் தேவைப்படுகிறது என்றார்.
‘மாபெரும் கூட்டணியை’ உருவாக்க அனைத்து எதிர்க்கட்சிகளின் உடன்பாடும் தேவைப்படுகிறது, மேலும் மகாதீர் மற்றும் அன்வர் ஆகிய இரு பெரிய நபர்கள் ஒரே மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
“எனவே, மகாதீர் இத்தாக்குதல்களை நிறுத்திகொண்டு, எதிர்க்கட்சிக்கு ஒரு புதிய திசையை வகுப்பதில் பி.எச்.-உடன் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்த அன்வர் அளிக்கும் வாய்ப்பை ஏற்க வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, அங்காத்தான் மூடா கெஅடிலான் (ஏ.எம்.கே.), பி.எச். முன்னோக்கி நகர வேண்டும், மகாதீருடனான ஒத்துழைப்பை மறந்துவிட வேண்டிய நேரம் இது என்று கூறியது.
“மாபெரும் கூட்டணி எனும் சுலோகம், மகாதீர் சவாரி செய்ய அவர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு தந்திரமாகும், நம்மை பிரித்தாள அவர் வகுக்கும் திட்டம் இதுவென்பதை பி.எச். உணர வேண்டும்,” என்று ஏ.எம்.கே. தலைவர் அக்மால் நசீர் தெரிவித்தார்.