கோவிட் 19 : தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 2,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள்

சுகாதார அமைச்சு இன்று நண்பகல் வரை, 2,295 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தது. ஆக, மலேசியாவில் மொத்த நேர்மறை தொற்றுகளின் எண்ணிக்கை 117,373-ஆக உள்ளது.

புதிய நேர்வுகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 2,000-ஐ தாண்டியது இதுவே முதல் முறை.

நேற்றைய நிலவரத்தைப் போலவே, சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகள் (638 – 27.8 விழுக்காடு) பதிவாகியுள்ளன.

ஜொகூர் மற்றும் பினாங்கில் முறையே 580 நேர்வுகள் (25.3 விழுக்காடு) மற்றும் 288 நேர்வுகள் (12.5 விழுக்காடு) என அதிகரித்துள்ளன.

அதேவேளையில், 3,321 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 51 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

சுங்கை பூலோவில் இருவர், கோலாலம்பூர், அம்பாங், கோத்தா பாரு, சிரம்பான், சண்டகான், கிள்ளான் மற்றும் ஈப்போவில் தலா ஒருவர் என இன்று, 9 நோயாளிகள் இத்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

சிலாங்கூரில் 638, ஜொகூரில் 580, பினாங்கில் 288,  சபாவில் 259, கோலாலம்பூரில் 156, நெகிரி செம்பிலான் 131, மலாக்காவில் 95, கெடாவில் 47, பஹாங்கில் 29, கிளந்தானில் 26, திரெங்கானுவில் 16, புத்ராஜெயா மற்றும் பேராக்கில் 12, சரவாக்கில் 5, லாபுவானில் 1.

மேலும் இன்று, 9 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை :-

ஹாரும் பணியிடத் திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம்; காசுவாரினா கட்டுமானத் தளத் திரளை – சிலாங்கூர், செப்பாங் & பெட்டாலிங் மாவட்டங்கள்; பத்து லாபான் திரளை – சபா, தம்புனான், ரானாவ், கோத்த பெலுட் மாவட்டங்கள்; ஜாலான் பிபிஎன் திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம்; டிவானி திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம்; ரெங்கம் திரளை – சிலாங்கூர், செப்பாங், கிள்ளான் & பெட்டாலிங் மாவட்டங்கள்; பெலுகார் திரளை – கிளந்தான், மாச்சாங் மாவட்டம்; கோலாம் பெர்மாய் திரளை – திரெங்கானு, கிமாமான், கோல திரெங்கானு மாவட்டங்கள் & சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம்; மாடோர் திரளை – சரவாக், மெராடோங் & சிபு மாவட்டங்கள்.