ஜொகூர், பஹாங்கின் சில பகுதிகளில் ஆபத்தான வானிலை எச்சரிக்கைகள்

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா), பஹாங் மற்றும் ஜொகூரின் பல பகுதிகளில் தொடர் பலத்த மழையின் காரணமாக, இன்று ஆபத்தான மற்றும் மோசமான வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பஹாங்கின் பெக்கான், ரொம்பின் மாவட்டங்கள் மற்றும் ஜொகூர், மெர்சிங்கில் தொடர்ச்சியான கனமழையுடன் ஆபத்தான வானிலை நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையின்படி, தொடர்ச்சியான கனமழையுடன் கூடிய மோசமான வானிலை எச்சரிக்கைகள் பஹாங், ரவுப், பெந்தோங், தெமெர்லோ, மாரான், குவாந்தான் மற்றும் பெரா மாவட்டங்களையும், ஜொகூரில் உள்ள சிகாமாட் மற்றும் குளுவாங் ஆகிய மாவட்டங்களையும் பாதிக்கும்.

மேலும், கிளந்தான், திரெங்கானு, பஹாங் (கேமரன் மலை, லிப்பிஸ் மற்றும் ஜெராண்துட்) மற்றும் ஜொகூர் (தங்காக் மற்றும் மூவார்) ஆகிய இடங்களில் நாளை வரை கனமழை பெய்யுமென்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தீபகற்ப மேற்குக் கடற்கரை மாநிலங்களான, சரவாக் மற்றும் சபாவின் சிலப் பகுதிகளில் இடியுடன் கூடியப் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக, மாலை தொடங்கி அதிகாலை வரை இந்தச் சூழ்நிலையில், திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயமும் உண்டு.

கிளந்தான், திரெங்கானு, பஹாங் மற்றும் கிழக்கு ஜொகூரில், மணிக்கு 60 கிமீ வேகத்தில், 4.5 மீட்டருக்கு மேல் நீரின் அலைகள் உயரும் என்றும்  வடகிழக்கு காற்று வலுவாக வீசும் என்றும் மெட்மலேசியா கணித்துள்ளது.

“சரவாக், சபா மற்றும் கூட்டரசுப் பிரதேசமான லாபுவானில், மணிக்கு 60 கிமீ வேகத்தில், 4.5 மீட்டர் வரையில் நீரின் அலைகள் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • பெர்னாமா