கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்.எஸ்.ஆர்) திட்டத்தை இரத்து செய்வது மாநிலத்தின் பொருளாதாரத்தை ‘கொல்வதற்கு’ ஈடானது என்று ஜொகூர் அம்னோ இளைஞர் அணி தலைவர் மொஹமட் ஹைரி மத் ஷா விவரித்தார்.
எச்.எஸ்.ஆர். நிறுத்தப்பட்டது, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கம் மற்றும் நம்பிக்கைக்குப் பாதகம் ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நுண் பொருளாதாரத்தையும் அது பாதிக்கிறது, குறிப்பாக ஜொகூரில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பொருளாதாரத் திட்டங்களை.
முன்னதாக, எச்.எஸ்.ஆர். அபிவிருத்தித் திட்டத்திற்காக, ஜொகூரில் மூவார், பத்து பஹாட் மற்றும் இஸ்கந்தார் புத்ரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இரயில் நிலையங்களை நிர்மாணிக்கும் திட்டம் இருந்தது.
“இந்தப் பகுதிகளுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் என்னவானது? ஏற்கனவே தங்கள் வீடுகளுக்கு அருகே அதிவேக இரயில் பொதுப் போக்குவரத்து வரப்போவதை அறிந்து, இந்தப் பகுதிகளில் வணிக இடங்கள், வீடுகளை வாங்கியவர்களின் நிலை என்ன?
“இந்தத் திட்டம் இரத்து செய்யப்படுவதால், 70,000 வேலை வாய்ப்புகள் இழக்கப்படும், அது பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்? இத்திட்டத்தால் பயனடையவிருந்த பூமிபுத்ரா சிறு வணிக ஒப்பந்தக்காரர்களின் வாய்ப்புகள் என்னவானது,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிங்கப்பூருக்குச் செலுத்த வேண்டிய RM300 மில்லியன் இழப்பீடு, ஜொகூர் மக்களுக்கு உதவுவதற்காக மாற்றப்பட வேண்டும் என்று மொஹட் ஹைரி மேலும் கூறினார்.
“இந்த 350 கிலோமீட்டர் பாதைக்கு, எச்.எஸ்.ஆர். அமைப்பதற்கான மொத்த செலவு RM110 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“இது இரத்து செய்யப்பட்டதன் விளைவாக, அரசாங்கம் RM300 மில்லியன் இழப்பீட்டை செலுத்த வேண்டும், இந்தத் தொகையினால் ஜொகூரின் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும் மற்றும் மாநிலத்தில் உள்ள பல பயனாளிகளுக்கு இதனை விநியோகிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
மேலும், இத்திட்டத்தை இரத்து செய்வது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மொஹமட் ஹைரி அரசாங்கத்தை வலியுறுத்தினார்.