தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து, மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுக்கு மற்றொரு கடிதம் அனுப்பியுள்ளதாக பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிரதமராக வர அம்னோவின் ஆதரவைப் பெற முடியும் என்று இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா என்று கேட்டபோது, இப்போது எல்லாம் அகோங்கின் விருப்பப்படி உள்ளது என்றார் அன்வர்.
“நான் அகோங்கிற்குக் கடிதம் அனுப்பியுள்ளேன். அகோங் அண்மையில்தான் தனிமைப்படுத்தலை முடித்துள்ளார்.
“அது அகோங்கின் விருப்பம். இதைவிட அதிகமாக நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,” என்று அவர் கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அபுதாபி சென்றுவந்தப் பின்னர், டிசம்பர் 26 முதல் சுல்தான் அப்துல்லா தனிமைப்படுத்தப்பட்டார்.
பெர்னாமா அறிக்கையின்படி, அகோங்கின் ஏழு நாள்கள் தனிமைப்படுத்தல் நேற்றோடு நிறைவடைந்தது.
மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, பி.கே.ஆர். தலைமைக்கு நெருக்கமான ஒரு வட்டாரம், மக்களவை அமர்வின் முடிவில், கடந்த மாதம் அகோங்கிற்கு அன்வர் கடிதத்தை அனுப்பியதாக நம்பப்படுகிறது என்று கூறினார்.