`பெர்சத்து, பாஸ் கூட்டணி அம்னோவைத் தோற்கடிக்காது`

அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ) கூட்டணி கட்சிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டால், பாஸ் மற்றும் பெர்சத்து கூட்டணியால் அம்னோவைத் தோற்கடிக்க முடியாது என்று சரவாக் மலேசியப் பல்கலைக்கழகத்தின் (யுனிமாஸ்) முன்னாள் மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் ஜெனிரி அமீர் தெரிவித்தார்.

அந்த அரசியல் பார்வையாளர் மேலும் கூறுகையில், “இது சாத்தியமில்லை, ஏனென்றால் பெர்சத்து, பாஸ் ஆகிய இரு கட்சிகளும் அம்னோவின் வலிமையை அடிப்படையாகக் கொண்டவை, உண்மையில் அக்கட்சிகளும் தற்போதைய பி.என். அரசாங்கமும் அம்னோ ஆதரவின் காரணமாக மட்டுமே தாக்குபிடிக்கின்றன.

“அவர்கள் (பெர்சத்து, பாஸ்) அடுத்தத் தேர்தலில் ஒன்றிணைந்து பணியாற்ற விரும்பினாலும், அம்னோவைத் தோற்கடிப்பது அவர்களுக்குக் கடினமானது,” என்று இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

பாஸ் அம்னோவுடன் இணைந்து செயல்பட வேண்டும், அது அவர்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், என்றும் ஜெனிரி மேலும் விளக்கினார்.

“பெர்சத்துவுடன் இருந்தால், அவர்களின் புகழ் மட்டுமே அதிகரித்து வரும், ஆனால், அடுத்த ஜி.இ.-யில் மிகவும் பாதிக்கப்படும் கட்சியாக அது இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர் டாக்டர் அவாங் அஸ்மான் அவாங் பாவியும் பெர்சத்து, பாஸ் இரண்டும் அடுத்த ஜி.இ.யில் அம்னோவை எதிர்த்துப் போராட முடிவு செய்தால், அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ஜெனிரியை ஒத்த கருத்து தெரிவித்தார்.