பேராக்கில் கிளைகள் அமைக்க, பெர்சத்து அம்னோவுக்குப் பணம் கொடுக்கிறது – நஸ்ரி

முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மொஹமட் நஸ்ரி அப்துல் அஜீஸ், பேராக்கில் பெர்சத்து கட்சிக்குக் கிளைகள் அமைக்க, பெர்சத்து சில அம்னோ உறுப்பினர்களுக்கு RM20,000 வழங்கியது என்று குற்றஞ்சாட்டினார்.

பாடாங் ரெங்காஸ் எம்.பி.யான நஸ்ரி, பெர்சத்துவில் அடிமட்ட உறுப்பினர்களின் பற்றாக்குறையைத் தொடர்ந்து இந்தச் சலுகை வழங்கப்படுவதாகக் கூறினார்.

நான் முன்பே குறிப்பிட்டுள்ளேன், பேராக் பெர்சத்து மீது அம்னோ உண்மையில் கோபமாக இருக்கிறது, ஏனெனில் அது கிராமத் தலைவர்கள், உள்ளூர் அதிகாரிகளைக்கூட (கவுன்சிலர்) விட்டுவைப்பதில்லை.

அவர்கள் அம்னோ உறுப்பினர்களைத் திருடுகிறார்கள், அவர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள், ஒரு கிளையைத் திறக்க RM20,000,” என்று அவர், நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது கூறினார்.

“8,000 கிளைகளை அமைக்க விரும்புவதாகப் பெர்சத்து பொதுச்செயலாளர் (ஹம்சா ஜைனுடின்) ஓர் அறிக்கையில் கூறுயுள்ளார், அதை இலவசமாக செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா, குறுகிய காலத்தில் அதைச் செய்ய முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில், பெர்சத்துவுடன் ஒத்துழைக்க அம்னோ மறுப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

“இந்தப் புதன்கிழமை, பாடாங் ரெங்காஸ் அம்னோ பிரதிநிதிகள் ‘பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை நிராகரிக்க வேண்டும்’ எனும் விருப்பத்தைத் தெரிவிக்க அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமீடியைச் சந்திக்கவுள்ளோம்.

“நாங்கள் முவஃபாகாட் நேஷனலை வலுப்படுத்த விரும்புகிறோம், 15-வது பொதுத் தேர்தல் மார்ச் மாதம் அல்லது ஜூன் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.