கிள்ளான் பள்ளத்தாக்கின் முக்கிய நதிகள் மாசுபடுவதால், நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதற்காக, பி.கே.ஆர். தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் சில தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய, 750 நுகர்வோருக்கு, வங்சா மாஜூ எம்.பி., தான் யீ கியூ தலைமை தாங்கவுள்ளார்.
அக்டோபர் 2020-ல், பி.கே.ஆர். மக்கள் பிரதிநிதியான அவர், நீர் மற்றும் மாசுபாடு துறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்தச் சமீபத்திய வழக்கு, அடுத்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தான் கூறினார்.
இந்த நீதிமன்ற உரிமைகோரலில், பிரதிவாதிகளாக, தேசிய நீர் சேவை ஆணையம் (ஸ்பான்), சுற்றுச்சூழல் துறை மற்றும் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) ஆகியவைப் பெயரிடப்படும் என்று தான் விளக்கினார்.
இது தவிர, சிலாங்கூரில் நதி மாசுபாடு குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியக் குற்றச்சாட்டிற்காகத், தனியார் நிறுவன வல்லுனர் சியினோ தி.டபிள்யூ. சென். பெர். (Pakar Scieno TW Sdn Bhd) மீதும் வழக்குத் தொடர தான் முடிவு செய்துள்ளார்.
“வழகுரைஞர்கள் உரிமைகோரல் வழக்கின் ஆவண வரைவைப் பூர்த்தி செய்துள்ளனர், ஆனால், மத்திய அரசின் மீதும் வழக்குத் தொடர வேண்டும் என்று ஒரு புதிய அறிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். சியினோ வல்லுனர்களிடமிருந்து எங்களுக்குக் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
“மாசுபாட்டைக் கண்காணிக்கவும், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவும் அந்நிறுவனத்திற்கு ஓர் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர் …. எனவே, நாங்கள் அந்நிறுவனம் மீது வழக்குத் தொடர விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
“நாங்கள் நீதி பெற விரும்புகிறோம், அரசு நிறுவனங்களும் துறைகளும் இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களைக் கைவிட முடியாது.
இதற்கிடையில், மாநில அரசாங்கத்திற்கு எதிரான தனது வழக்கு பி.கே.ஆருடனான தனது உறவைப் பாதிக்காது என்றும் தான் கூறினார்.
பி.கே.ஆரின் கொள்கைகளும் சீர்திருத்தங்களும் நல்ல அரசாங்கத்தை விரும்புகின்றன என்று அவர் கூறினார்,
“அரசு நிறுவனங்களில் தவறு இருந்தால், நாம் ஏன் அதனை மறைக்க வேண்டும்? இது எங்கள் சீர்திருத்தக் கொள்கை அல்ல.
“தவறு செய்யும் அரசியல்வாதிகள் இருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மந்திரி பெசார் மற்றும் அமைச்சர்கள் தங்கள் கடமைகளைப் புறக்கணித்தால், அவர்கள் தரமிறக்கப்பட வேண்டாமா? அவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும்,” என்றார் தான்.
மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மட்டுமே, நீர் இடையூறுக்குக் காரண, என்பதையும் அவர் ஏற்கவில்லை.
அக்டோபர் 2020-ல், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள பகுதிகள் ஒரு மாதத்தில் நான்கு முறை திட்டமிடப்படாத நீர் தடைகளைச் சந்தித்தன. அதற்கு முன்னர், 2020 மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் 18 நீர் இடையூறு சம்பவங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.