டாக்ஸி ஓட்டுநர்கள் ‘கிராப்கார்’-ருக்கு எதிராக RM100 மில்லியன் வழக்கு

2014-லிருந்து 2017 வரையில், சட்டவிரோதமாக இ-ஹேய்லிங் சேவையை வழங்கியதற்காக, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் ‘கிராப்கார்’ருக்கு எதிராக RM100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி, டாக்ஸி, வாடகை கார்கள், லிமோசைன்கள் மற்றும் மலேசிய விமான நிலைய டாக்ஸிகள் கூட்டமைப்புகள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்து, 15 டாக்ஸி ஓட்டுநர்களை வாதிகளாகவும், கிராப்கார் சென். பெர்.-யை பிரதிவாதியாகவும் பட்டியலிட்டுள்ளது.

மலேசியாகினி பார்த்த உரிமைகோரல் அறிக்கையின் நகலின்படி, கிராப்காரின் இ-ஹெயிலிங் சேவை, 2014 மே 16 முதல் 2017 ஜூலை 27 வரை, போக்குவரத்துச் சட்டம் 2012, போட்டிச் சட்டம் 2010 (Akta Persaingan 2010) மற்றும் மத்திய அரசியலமைப்பை மீறியதாக வாதிகள் கூறியுள்ளனர்.

“பொதுப் போக்குவரத்து வணிகத்தை நடத்தியது, சாலை போக்குவரத்து அமைச்சு மற்றும் மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட டாக்சிகள் மற்றும் வாடகை கார்களுடன் போட்டியிட்டது” போன்ற செய்கைகளால் கிராப்கார் போக்குவரத்துச் சட்டத்தின் விதிகளை மீறியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அந்தக் காலகட்டத்தில் இ-ஹெயிலிங் சேவைகளை வழங்க போட்டிச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

“ஆக, சேவைத் துறையில் தனது நிலையைப் பிரதிவாதி தவறாகப் பயன்படுத்தியுள்ளார். பிரதிவாதி நியாயமற்ற வர்த்தகத்தைச் செய்துள்ளார்.

“பிரதிவாதிகள் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம், வருமானம், உரிமைகள் மற்றும் நலன்களுக்குத் தீங்கு விளைவித்துள்ளனர்.

கிராப்கார் 2014 மே 16 முதல் ஜூலை 27, 2017 வரை உரிமம் இல்லாமல் செயல்பட்டதாகவும், ஒப்பந்தச் சட்டம் 1950-ஐ மீறியதாகவும் அக்கூட்டணி கூறியது.

இதன் காரணமாக, அந்தக் காலகட்டத்தில் இ-ஹெயிலிங் சேவைகள் மூலம் பெறப்பட்ட வருமான இலாபங்களிலிருந்து, வாதிக்கு இழப்பீடு தர வேண்டும் எனக் கூட்டணி கோரியுள்ளது.