ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட் (1எம்.டி.பி) நிதி வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கியது.
நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுய்ரா முன்னிலையில், 10-வது சாட்சியுடன் வழக்கு தொடரும், முன்னாள் 1 எம்டிபி-யின் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் ஹஸீம் அப்துல் ரஹ்மானைப் பாதுகாப்பு குழுவுக்குத் தலைமை தாங்கும் வழக்கறிஞர் முஹம்மது ஷஃபி அப்துல்லா விசாரிப்பார்.
47 வயதான மொஹமட் ஹஸீம், கடந்தாண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி சாட்சியமளிக்கத் தொடங்கினார்.
67 வயதான நஜிப், 1எம்.டி.பி நிதியில் இருந்து RM2.3 பில்லியன் கையூட்டு பெற தனது பதவியைத் தவறாக பயன்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் அதேத் தொகையை உள்ளடக்கிய 21 பண மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
வழக்கின் விசாரணை, இன்று தொடங்கி ஜூலை மாதம் வரை தொடரும் என்று தெரிகிறது.
முன்னதாக, திறந்த நீதிமன்றத்திற்குள் நுழைய ஊடகப் பணியாளர்கள் சிறப்பு அனுமதி அட்டைகளையும் நேரடி வீடியோக்களைக் கொண்ட ‘வீடியோ இணைப்புகள்’ எனப்படும் இரண்டு வீடியோ அறைகளையும் எடுக்க வேண்டியிருந்தது.
கோவிட் -19 தொற்றுநோயின் காரணமாக, கடந்தாண்டு மார்ச் 19-ஆம் தேதி தொடக்கம், திறந்த நீதிமன்றங்கள் மற்றும் வீடியோ அறைகளுக்கான ஊடகங்களின் எண்ணிக்கையைத் தலா 10 பேருக்கு மட்டுமென நீதிமன்ற நிர்வாகம் மட்டுப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா