மாச்சாங் எம்.பி.யின் ஆதரவு இனி முஹைதீனுக்கு இல்லை

கிளந்தான் அம்னோ தலைவர், பெர்சத்து தலைவருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றதனால், முஹைதீன் யாசினுக்குப் பின்னால் இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை இன்று குறைந்தது.

கோத்தா பாருவில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாச்சாங் எம்.பி.யுமான அஹ்மத் ஜஸ்லான் யாகூப் தனது நிலைப்பாட்டை அறிவித்தார்.

அஹ்மத் ஜஸ்லானின் இந்த அறிவிப்பினால், தேசியக் கூட்டணி அரசாங்கம் மக்களவையில் 220 எம்.பி.க்களில் 110 பேரின் ஆதரவோடு நிற்கிறது.

மக்களவையில் 222 இடங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் இரு எம்.பி.க்களின் மரணம் காரணமாக இரண்டு இடங்கள் காலியாக உள்ளன.

நாடாளுமன்றத்தின் 110 உறுப்பினர்களால் மட்டுமே ஆதரிக்கப்பட்ட போதிலும், எதிர்க்கட்சி கூட்டணியின் பிளவுகள் காரணமாக, தேசியக் கூட்டணி அரசாங்கம் இன்னும் நிலைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சி – பக்காத்தான் ஹராப்பான் – 91 எம்.பி.க்களை மட்டுமே கொண்டுள்ளது, மேலும் 17 பேர் அவர்களுடன் சேரவில்லை.

முன்னதாக, மலேசியப் பாமாயில் வாரியத்தின் (MPOB) தலைவராக, தேசியக் கூட்டணி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அஹ்மத் ஜஸ்லான், ஐந்து நாட்களுக்கு முன்பு அப்பதவியை இராஜினாமா செய்தார்.

“எனது முடிவு என்பது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அச்சுறுத்துவதற்கில்லை, அரசாங்கம் வீழ்ச்சியடையாது, பொதுத் தேர்தல் அறிவிக்கப்படாது, ஏனெனில் தேசியக் கூட்டணி இன்னும் 110 ஆதரவுகளைக் கொண்டுள்ளது. இதனை நான் நன்கு உணர்ந்துள்ளேன்.

“அரசாங்கத்திற்கு இன்னும் பெரும்பான்மை உள்ளது, ஆனால், அது குறைந்து வருகிறது அவ்வளவுதான்,” என்று அவர் கூறினார்.