மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து, கூட்டாட்சி அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டு, பிரதமர் முஹைதீன் யாசின் மாட்சிமை தங்கியப் பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவை எதிர்கொள்ள வேண்டும் என்று பி.கே.ஆர். எம்.பி. ஹசான் கரீம் தெரிவித்தார்.
நேற்று, கிளந்தான் அம்னோ தலைவரும், மாச்சாங் எம்.பி.யுமான அஹ்மத் ஜஸ்லான் யாகூப், முஹைதீன் மற்றும் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்திற்கான தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுகொள்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஹசான் இவ்வாறு கூறினார்.
“மத்திய அரசியலமைப்பின் பிரிவு 43 (2) (a)-இன் அடிப்படையில், முஹைதீன் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார் என்ற அடிப்படையில், மன்னர் அவரைப் பிரதமராக நியமித்தார்.
“இப்போது மச்சாங் எம்.பி. தனது ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளார். இந்தச் சூழ்நிலையில், நாம் மீண்டும் கூட்டாட்சி அரசியலமைப்பைக் குறிப்பிட வேண்டும். மத்திய அரசியலமைப்பின் பிரிவு 43 (4) பின்வருமாறு கூறுகிறது :
” ‘மக்களவையின் உறுப்பினர்களின் பெரும்பான்மை நம்பிக்கை பிரதமருக்கு இல்லையென்றால், மன்னரால் மக்களவை கலைக்கப்படாவிட்டால், பிரதமர் அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும்’ ,” என்று ஹசான் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் இது மிகவும் தெளிவாக உள்ளதால், முஹைதீன் விரைவில் அதற்கு இணங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபோது, முஹைதீன் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். உறுதிமொழியை நிரூபிக்க இதுவே சரியான நேரம்,” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையே, அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட், “மாற்று பெரும்பான்மை” உருவாகாத வரை, முஹைதீனை அகற்றுவதற்கு இது போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
“பி.எச். அரசாங்கத்தை ஆதரிக்க, போதுமான அம்னோ உறுப்பினர்கள் இருக்கும் வரை, மக்களவையில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும், முஹைதீனின் கூட்டணி இன்னும் மிகப்பெரிய எண்ணிக்கையைக் கொண்டுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.