‘சுகாதார அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், பி.கே.பி. தீர்வு அல்ல’

புக்கிட் மெர்தாஜாம் எம்.பி., ஸ்டீவன் சிம் சீ கியோங், கோவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதில் கவனம் செலுத்துமாறு தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

“பி.கே.பி, கடுமையாக்கப்பட்ட பி.கே.பி., நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. மற்றும் மீட்புநிலை பி.கே.பி. ஆகியவற்றின் பல்வேறு செயலாக்கங்களுக்குப் பிறகும், துரதிர்ஷ்டவசமாக மலேசியாவில் புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் புதிய அலைகளை நாங்கள் காண்கிறோம்,” என்று சிம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கோவிட் -19 பாதிப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து எழுந்த ஊகங்கள் குறித்தும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் முஹைதீன் யாஸினின் சிறப்பு அறிவிப்பு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

சிம் எதிர்க்கட்சி, கல்வியாளர்கள், வல்லுனர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பங்குதாரர்களை உள்ளடக்கிய ஓர் உயர்மட்ட அவைக்கு அழைப்பு விடுத்தார்.

கோவிட் -19 தொற்றின் தடுப்பையும் மேலாண்மையையும் மையப்படுத்தக்கூடாது, அதற்குப் பதிலாக, அந்தந்த இடங்களில், பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய இலக்கு வைத்த செயல்பாடுகள் அவசியம் என்றார் அவர்.

“ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலாச்சாரங்கள், நிலைமைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்கின்றன.

“கோவிட் -19 தடுப்பு திட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் அவரவர் திட்டங்களை வழிநடத்த வளங்கள் மற்றும் சக்தி (அதிகாரப் பகிர்வு) வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துவதோடு ஒப்பிடுகையில், தொற்றுக்கான சோதனை, கண்டறிதல் மற்றும் சிகிச்சையைக் கையாள்வதில், சுகாதார அமைப்பின் திறன் குறித்து சிம் கேள்வி எழுப்பினார்.

இந்த மூன்று நடவடிக்கைகளையும் உடனடி விகிதத்தில் சுகாதார அமைப்பு செயல்படுத்த முடிந்தால், மக்கள் ஒரு புதிய சாதாரண சூழலில் வாழ முடியும் என்றார் அவர்.

“இன்று நாம் எதிர்கொண்டிருப்பது, நமது சுகாதார அமைப்பின் பிரச்சினை (வழக்குகளுக்கு இடமளிப்பதில்). சோதனைகள் உடனடியாக செய்ய முடியவில்லை, தொடர்புகளின் கண்காணிப்பு இன்னும் கையீட்டிலும் (மேனுவல்) மெதுவாகவும் உள்ளது, இருப்பினும் எங்குச் சென்றாலும் நாம் ‘மைசெஜாத்தெரா’வை எப்போதும் பயன்படுத்துகிறோம், போதுமான தனிமைப்படுத்துதல் மையங்கள் இல்லை.

“கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பல முனைமுக ஊழியர்கள் தொடர்ந்து தொற்றுநோயை எதிர்த்துப் போராடிவருவதால், சுகாதாரத் துறையில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது,” என்றார் அவர்.

“பி.கே.பி மீண்டும் செயல்படுத்தப்பட்டாலும், சுகாதார அமைப்பின் தயார்நிலை பற்றிய கேள்விக்குத் தீர்வு காணாவிட்டால், இறுதியில் நாம் அதே நிலைமையை எதிர்கொள்வோம்.

“கிடைக்கக்கூடிய அனைத்து உதவிகளையும் அரசாங்கம் பயன்படுத்த வேண்டும். பலர் முழு அரசாங்கத்தையும் சமூகத்தின் முழு அணுகுமுறையையும் (whole-of government  & whole-of-society ) இன்னும் பரவலாக வலியுறுத்தியுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

வெகுஜன திரையிடல் சோதனைக்கும் தடுப்பூசி போடவும், நாடு முழுவதும் உள்ள தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளின் வலைப்பின்னலைப் பயன்படுத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

அண்மையில், பினாங்கு அரசாங்கம், தடுப்பூசி வரும்போது இலவசத் தடுப்பூசி சேவைகளை வழங்க வேண்டுமென்று, பினாங்கு தனியார் மருத்துவப் பயிற்சியாளர்கள் சங்கத்துடன் (பி.எம்.பி.எஸ்.) இணைந்து, மாநிலத்தில் உள்ள 100 தனியார் கிளினிக்குகளுடன் ஓர் உடன்பாட்டை எட்டியது என்றும் அவர் கூறினார்.