ஜனவரி 13 தொடக்கம், 8 மாநிலங்கள், கூட்டரசு பிரதேசங்களில் பி.கே.பி.

கோவிட் – 19 | நாளை மறுநாள், புதன்கிழமை (ஜனவரி 13) தொடங்கி, 14 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) அரசாங்கம் அறிவித்துள்ளது, இது ஜனவரி 26 வரை நீடிக்கும்.

இத்தகவலைச் சற்றுமுன், பிரதமர் முஹைதீன் யாசின் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட சிறப்பு செய்தியில் அறிவித்தார்.

இந்த உத்தரவு மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்று முஹைதீன் விளக்கினார்.

முதல் கட்டம், பினாங்கு, சிலாங்கூர், கூட்டாட்சி பிரதேசங்கள் (கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான்), மலாக்கா, ஜொகூர் மற்றும் சபா ஆகிய ஆறு மாநிலங்களில் பி.கே.பி. விதிக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டம், பஹாங், பேராக், நெகிரி செம்பிலான், கெடா, திரெங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய ஆறு மாநிலங்களில் நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. செயல்படுத்தப்படும்.

மூன்றாம் கட்டம், மீட்புநிலை பி.கே.பி. பெர்லிஸிலும் சரவாக்கிலும் செயல்படுத்தப்படும்.

இருப்பினும், கூச்சிங், சிபு மற்றும் மிரியில் நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி.யைச் செயல்படுத்தப்போவதாகச் சரவாக் மாநில அரசு இன்று கூறியுள்ளது.

வட்டாரங்கள், மாநிலங்கள் இடையிலான பயணங்களுக்குத் தடை

நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலானப் பயணங்களுக்கு அனுமதி இல்லை என்றும் முஹைதீன் அறிவித்தார்.

ஐந்து மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சி பிரதேசங்களை உள்ளடக்கிய முதல் கட்ட பி.கே.பி.-க்கு, முக்கியப் பொருளாதாரத் துறைகளின் பட்டியலில் உள்ள வணிகங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

“அரசாங்கம் அடையாளம் கண்டுள்ள, அந்த ஐந்து துறைகள், தேவையான பொருளாதாரத் துறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, அதாவது உற்பத்தி, கட்டுமானம், சேவைகள், வர்த்தகம் மற்றும் விநியோகத் துறையோடு, தோட்டங்கள் மற்றும் வியாபாரப் பொருட்கள் ஆகியவை அடங்கும்,” என்று முஹைதீன் கூறினார்.

இந்தத் துறைகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய அவை அவசியமானவை என்றார்.

இருப்பினும், இந்தத் துறைகளின் நிர்வாக ஊழியர்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே அலுவலகத்திலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி.) கட்டாயம் இணங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பி.கே.பி. செயல்படுத்தப்படும் மாநிலங்களில், மக்கள் நடமாட்டம் 10 கிலோமீட்டர் சுற்றளவில் மட்டுமே இருக்கவேண்டியது அவசியம்.

அருகிலுள்ள பல்பொருள் அங்காடி அல்லது மளிகைக் கடையிலிருந்து பொருள்கள் வாங்கும் நோக்கத்திற்காக, வீட்டு உறுப்பினர்களில் இருவர் மட்டுமே வெளியேறவும் ஒரே வாகனத்தில் பயணிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தத் தடையை மீறும் எந்தவொரு நபருக்கும், அதிகபட்சம் RM1,000 தண்டம் விதிக்கப்படலாம்.