பி.கே.பி. என்றாலும், தைப்பூச விடுப்பில் வீட்டிலேயே பிரார்த்தனைகள் செய்யலாம் – ம.இ.கா.

ஜனவரி 28-ம் தேதி, தைப்பூசத் திருவிழா விடுமுறையை இரத்து செய்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, கெடா ம.இ.கா. இளைஞர் பிரிவு மாநில மந்திரி பெசார் சனுசி முஹமட் நோரிடம் கேட்டுக்கொண்டது.

அதன் தலைவர் ஜீவபாலன் ஜெயராமன், இந்த முடிவு கெடாவில் உள்ள இந்திய சமூகத்தினரின் உணர்திறனை மதிக்கத் தெரியவில்லை என்று காட்டுவதாகக் கூறினார்.

“தைப்பூசம் கெடா, பினாங்கு, ஜொகூர் மற்றும் சிலாங்கூர் போன்ற மாநிலங்களுக்கு ஒரு நிகழ்வு விடுமுறை. அம்மாநிலங்களிலும் கொண்டாட்டத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அவை விடுமுறையை இரத்து செய்யவில்லை.

“நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) செயல்படுத்தி இருந்தாலும், தைப்பூசத்தைக் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் கொண்டாட முடியாது என்று அர்த்தமல்ல.

முன்னதாக, கோவிட் -19 தொடர்பான தற்போதைய சூழ்நிலையைத் தொடர்ந்து கெடாவில் தைப்பூசத்திற்கான நிகழ்வு விடுப்பு இருக்காது என்று சனுசி புதன்கிழமை அறிவித்தார்.

“இங்குக் கேள்வி என்னவென்றால், பிகேபி காலத்தைத் தைப்பூசத்துடன் இணைத்து, விடுமுறையைத் தொடர வேண்டாம் என்று கெடா மந்திரி பெசார் ஏன் தர்க்கம் செய்கிறார்? பண்டிகைகள் அல்லது மத நாட்கள் இன்னும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன, ஆனால் அதன் முறைகள் தொற்று காலத்தில் சற்று வேறுபட்டவை அவ்வளவுதான்.

“இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று இந்தியச் சமூகக் குழுக்களைச் சந்தித்ததாகவும், தைப்பூச விடுப்பு இரத்து செய்யப்பட்ட முடிவு குறித்து விளக்கமளித்ததாகவும் கூறிய அவரது அறிக்கை தொடர்பாக, கெடா மந்திரி பெசாரிடமிருந்து விளக்கம் கேட்க விரும்புகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

“அந்த அறிக்கை உண்மையா அல்லது ஓர் அரசியல் நாடகமா?” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பினார்.