முழுமையான பொருளாதார அடைப்பு, 2.8 மில்லியன் மக்களை வேலை இழக்கச் செய்யும் – இஸ்மாயில்

அடுத்த மாதம் முழு பொருளாதார மூடல் அமல்படுத்தப்பட்டால், சுமார் 2.8 மில்லியன் மக்கள் வேலை இழக்க நேரிடலாம் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

பிப்ரவரி 4-ம் தேதி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) 2.0 முடிவடைந்த பின்னர், அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கு முன்னர் ஏற்படக்கூடிய விளைவுகளை அரசாங்கம் முழுமையாக பரிசீலிக்கும் என்றார் அவர்.

ஐரோப்பிய ஒன்றியம் – மலேசிய வர்த்தகத் தொழிற்துறை மன்றம் (யூரோச்சேம் மலேசியா) வெளியிட்டுள்ள இரகசியச் சுற்றறிக்கையைத் தொடர்ந்து, முழு பொருளாதார மூடலுக்கான சாத்தியக்கூறுகள் பற்றிய ஊகங்களை இஸ்மாயில் குறிப்பிடுகிறார்.

ஊடகவியலாளர் சந்திப்பில், இஸ்மாயில், சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தற்போதுள்ள பி.கே.பி.யை அடுத்த மாதம் நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி.யாக மாற்றலாம் எனக் கோடிகாட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், பிப்ரவரி 4-க்கு முன், தேசியப் பாதுகாப்பு மன்றம் கூட்டம் நடைபெறும் வரை இறுதி முடிவு எதுவும் இல்லை என்று இஸ்மாயில் மீண்டும் வலியுறுத்தினார்.

“ஆம், நாங்கள் மக்களின் ஆரோக்கியத்தையும் அவர்களின் நலன்களையும் பாதுகாக்க விரும்புகிறோம், குறிப்பாக ஏழைகள். நாம் முழு கதவடைப்பை அமல்படுத்தினால், அது பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

“இதன் விளைவாக, 2.8 மில்லியன் மக்கள் வேலையை இழக்கும் அபாயத்தில் உள்ளனர், 2.5 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர சிரமப்படுவர், பி40 குழுவினர் வருமானத்தை இழப்பர், ஒரு மாதத்திற்கு இது RM6.4 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, சராசரியாக ஒரு குடும்பத்திற்கு RM2,400,” என்று அவர் கூறினார்.

மார்ச் மற்றும் அக்டோபர் 2020-க்கு இடையில், 13,445 நிறுவனங்கள் பி.கே.பி. அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தங்களது செயல்பாட்டை நிறுத்தின.

முடிதிருத்தும் தொழிலாளர்கள், இரவுச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் கார் கழுவும் ஆபரேட்டர்கள் போன்ற பல வணிகத் துறைகளின் முறையீடுகளைப் பார்க்கும் போது, மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்மாயில், இது விரைவில் ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.