பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கும், இலவசத் தடுப்பூசிகளை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அவ்வாறு இல்லையெனில், குடியுரிமை அந்தஸ்தின் அடிப்படையில் மனிதர்களிடம் பாகுபாடு காட்டாத அந்தக் கிருமியிலிருந்து அந்தச் சமூகம் பாதுகாக்கப்படாது என அது கூறியுள்ளது.
“பாதிக்கப்படக்கூடிய மக்கள், அகதிகள், குடியேறியவர்கள், குடியுரிமையற்ற மக்கள், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களில் உள்ள கைதிகள் உட்பட அனைவருக்கும் இலவசக் கோவிட் -19 தடுப்பூசியைப் பாகுபாடு இல்லாமல் வழங்குமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது […]
“ஆரோக்கியம் என்பது அனைவரும் அனுபவிக்கும் ஒரு மனித உரிமை. தடுப்பூசிகள் உட்பட சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் என்பது ஆரோக்கியத்திற்கான உரிமையின் ஒரு முக்கிய அம்சமாகும்.
2017 ஆம் ஆண்டு, மலேசியாவில் 2.96 மில்லியன் முதல் 3.26 மில்லியன் வரை பதிவுசெய்யப்பட்ட மற்றும் ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் இருப்பதாக உலக வங்கி முன்பு மதிப்பிட்டுள்ளது.
2020 மூன்றாம் காலாண்டில், மலேசியாவின் மக்கள் தொகை 32.69 மில்லியனாக இருந்தது.
2020 அக்டோபரில், மலேசியாவில் 178,450 அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் இருந்ததாக யு.என்.எச்.சி.ஆர். தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசி திட்டத்தின் கீழ், மலேசியர்கள் தடுப்பூசிக்குப் பணம் செலுத்த வேண்டியதில்லை.
வெளிநாட்டு தொழிலாளர்கள் கிருமியினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, ‘குழு நோய் எதிர்ப்பு சக்தி’யை அடைவதற்காக, வெளிநாட்டு தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி போடுவதை இப்போது அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் முன்பு கூறியிருந்தார்.
இருப்பினும், மனிதவள அமைச்சர் எம் சரவணன், தங்கள் ஊழியர்களுக்கு நோய்த்தடுப்பு மருந்து செலுத்துவதற்கான அனைத்து செலவுகளையும் முதலாளிகள் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
70 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும் என்பது அரசாங்கத்தின் குறிக்கோள்.
சிறைக் கைதிகள் மற்றும் தடுப்பு மையங்களில் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுமாறு புத்ராஜெயாவை சுஹாகாம் கேட்டுக்கொண்டுள்ளது.
சிறைச்சாலைகள், சிறைக்கட்டறை (lokap polis), குடிநுழைவு தடுப்பு மையங்கள் போன்றவைக் கோவிட் -19 தொற்று பரவல் இடங்களாக மாறியுள்ளன.
ஜனவரி 18 வரை, இவ்விடங்கள் 28 கோவிட் -19 திரளைகளைப் பதிவு செய்துள்ளன.