இன்று முதல், அதிகாரப்பூர்வ அரசாங்க கடிதங்களில் “மக்கள் மீது அக்கறை : கோவிட் 19-ஐ ஒழிக்க அவசரநிலை” என்ற வாசகத்தைச் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை, கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கண்டித்துள்ளார்.
கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான அவசரகால அறிவிப்புக்கு அந்தச் சுலோகம் இணங்குவதாகக் கூறப்பட்டாலும், இந்தச் சொற்றொடர் உண்மையில் அரசியல் பிரச்சாரமே ஒழிய வேறொன்றுமில்லை என்று லிம் கூறியுள்ளார்.
“இந்தப் புதியச் சொற்றொடர், மருத்துவ வல்லுனர்களைப் போன்ற முனைமுகப் பணியாளர்களிடமிருந்து வந்த ஒரு திட்டமா அல்லது பொது சேவைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஜே-கோமின் (J-KOM) அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியா?” என இன்றைய அறிக்கை ஒன்றில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று, பொது சேவைத் துறை, தற்போது அதிகாரப்பூர்வ அரசாங்கக் கடிதங்களில் குறிப்பிடப்படும், ‘நாட்டிற்காகச் சேவை செய்’ (Berkhidmat untuk Negara) எனும் சொற்றொடருக்கு முன்னதாக, ‘மக்கள் மீது அக்கறை : கோவிட் 19-ஐ ஒழிக்க அவசரநிலை’ என்ற சொற்றொடரையும்; ‘உத்தரவைப் பின்பற்றும் நான்’ (Saya Yang Menurut Perintah) எனும் சொற்றொடருக்கு மாற்றாக ‘நம்பிக்கையை நிறைவேற்றும் நான்’ (Saya Yang Menjalankan Amanah) என்ற சொற்றொடரையும் இந்த அவசரகால கட்டத்தில் பயன்படுத்த வேண்டுமென கடிதம் ஒன்றை வெளியாக்கியது.
இந்த முடிவு அவசரகால அறிவிப்பு மற்றும் கோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் அரசு ஊழியர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப உள்ளது என்று பொதுச் சேவைதுறை தலைமை இயக்குநர் மொஹமட் கைருல் ஆடிப் அப்துல் இரஹ்மான் கூறினார்.
அவசரகால நிலையை அறிவிப்பதைத் தவிர, கோவிட் -19 நோய்த்தொற்று தாக்கத்தை ஒழிக்க வேறு வழியில்லை என்ற எண்ணத்தைத் தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கம் அளித்துள்ளதாக லிம் கூறினார்.
மேலும் கூறுகையில், மற்ற நாடுகள் ஏற்கனவே தடுப்பூசி திட்டங்களைத் தொடங்கிவிட்டன, மேலும் அதிகத் தொற்று விகிதங்களைப் பதிவு செய்திருந்தாலும், கோவிட் -19 பிரச்சினைக்குத் தீர்வுகாண அவசரநிலையை அறிவிக்கவில்லை என்றார்.