நாளை, தைப்பூசக் கொண்டாட்டத்துடன் இணைந்த வெள்ளி தேரோட்டத்தை நடத்தக்கூடாது என்ற மாநில அரசின் உத்தரவை மீறியதற்காக, ஜார்ஜ்டவுனில் அமைந்துள்ள நாட்டுகோட்டைச் செட்டியார் கோயிலின் நிருவாகத்தைப் பினாங்கு இந்து அறவாரியம் (பி.எச்.இ.பி.) ஏற்க திட்டமிட்டுள்ளது.
பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவர் இராமசாமி, அனைத்து பினாங்கு குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் அந்தத் தேர் ஊர்வலம் புறக்கணித்துள்ளதாகக் கூறினார்.
“இந்து அறவாரியத்தின் கட்டளைச் சட்டத்தின் 4-வது பிரிவு, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கக் குழுவுக்கு உரிமை அளிக்கிறது. இதற்கு முன்னர் பினாங்கில் உள்ள சிக்கலான கோயில்களை வாரியம் கையாண்டது இதன்வழிதான்.
“ஒரு பொது புகார் அல்லது தவறான நிருவாகம் நடக்கிறது என்றால், அதில் வாரியம் தலையிட வேண்டிய அவசியம் உள்ளது. எவ்வாறாயினும், வாரியம் முதலில் மாநில ஆட்சிக்குழு உறுபினர்கள் மற்றும் மாநில ஆட்சியாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும்,” என்று அவர் இன்று ஜார்ஜ்டவுனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த ஆண்டு தைப்பூசத் தேரோட்டத்திற்கு அனுமதி இல்லை என்ற தங்கள் நிலைப்பாட்டை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக மாநிலத்தின் துணை முதல்வர் II, பி இராமசாமி தெரிவித்தார்.
இருப்பினும், தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஒப்புதல் பற்றி கூறாமல், தைப்பூசத்தின் போது தேர் ஊர்வலத்தை நடத்த, பினாங்கில் உள்ள இரண்டு கோயில்களுக்கு மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன் ஒரு கடிதம் வாயிலாக அனுமதி கொடுத்துள்ளார்.
“அனுமதி வழங்கப்படவில்லை, அவர்கள் (நாட்டுகோட்டை செட்டியார் கோயில்) மாநில அரசு அல்லது தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் அறிவுறுத்தல்களை மீறியிருந்தால், அதிகாரிகள் அவர்கள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார் அவர்.
இதற்கிடையில், கோயில் செயலவையினர் 10 பேருடன், வெள்ளி இரதத்தில் முருகக் கடவுளின் சிலையை எடுத்துச்செல்ல தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் தனது தரப்பு அனுமதி பெற்றுள்ளதாக நாட்டுகோட்டைச் செட்டியார் கோயில் அறங்காவலர் டாக்டர் ஏ நாராயணன் தெரிவித்தார்.
அதிகாலை 3.30 மணியளவில் இங்குள்ள லெபோ பினாங்கில் உள்ள கோயிலிலிருந்து புறப்பட்ட தேர், காலை மணி 6 அளவில், ஜாலான் ஆயேர் தெர்ஜுனில் அமைந்துள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலை அடைந்தது.
இந்த வெள்ளிக்கிழமை, மீண்டும் லெபோ பினாங்கிற்கு அது திரும்பும்.
– பெர்னாமா