முன்னாள் சுகாதார அமைச்சர் : எஸ்ஓபியைப் பின்பற்றாதவர்களுக்குத் தண்டத்தை உயர்த்தத் தேவையில்லை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) போது, செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) மீறும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள RM1,000 தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற தேசியக் காவல்துறைத் தலைவரின் முன்மொழிவுக்கு, முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மத் உடன்படவில்லை.

“மென்மையான அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் மூலம், அதிகமானோர் எஸ்ஓபி-யைக் கடைப்பிடிப்பதைக் காண நாம் விரும்புகிறோம்.

“பொது சுகாதாரப் பிரச்சினைகளில் நாம் ஒரு தன்னார்வ அணுகுமுறையைத் தேர்வு செய்கிறோம், இது நடத்தை மாற்றத்திற்கு உதவும்.

“நாம் வெற்றிபெறாததற்குக் காரணம், அது தெளிவாக இல்லை, மேலும் அது சிறு விஷயத்திற்கெல்லாம் தண்டிப்பதாகவும் கருதப்படுகிறது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பிரமுகர்களுடன் ஒப்பிடும்போது, சாதாரண மக்களிடம் அரசாங்கம் கண்டிப்பாக நடந்து கொள்கிறது, கடுமையான தண்டனைகளைக் கொடுக்கிறது என்று அவர் கூறினார்.

“கோவிட் -19 பிரச்சனைகளைக் கையாள்வதில், இது ஒருதலைப்பட்ச அணுகுமுறையாக கருதப்படுகிறது, இது இறுதியில் சமூகத்தினரிடையே அதிருப்தியை அதிகரிக்கிறது,” என்று அவர் கூறினார்.

அதற்குப் பதிலாக, எஸ்ஓபியை மீறுபவர்கள் சமூகச் சேவை செய்ய வேண்டுமெனும் தண்டனையை விதிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.

“அவர்கள் முகக்கவரி அணியும் விதியை மீறுகிறார்கள் என்றால், எட்டு மணி நேரம் பொது இடங்களில் முகக்கவரி அணியுமாறு கேட்டுக்கொள்வது போன்ற தண்டனை,” என்று அவர் பரிந்துரைத்தார்.