முன்னாள் சட்டத்துறைத் தலைமை அதிகாரி (அட்டர்னி ஜெனரல்), தோமி தோமஸ் புதிதாக வெளியிட்ட அவரது நினைவுக் குறிப்பின் உள்ளடக்கங்கள் தொடர்பான ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து வழக்கறிஞர் மொஹமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மை ஸ்டோரி : ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ் (My Story: Justice in the Wilderness), என்ற தலைப்பிலான அப்புத்தகத்தைத் தான் இன்னும் படிக்கவில்லை என்று கூறிய ஹனிஃப், மலேசியாகினியில் பல மேற்கோள்களைக் காட்டி வெளியான கட்டுரைகள் தன் மனதில் நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளன என்றும், இதில் இரண்டு ஆண்டுகளாக சட்டத்துறைத் தலைவராக இருந்த தோமஸ்’சின் தொழில்முறை சார்ந்ததும் உள்ளடங்கும் என்றும் கூறினார்.
பதவி வகித்தபோது, தோமஸ் “வழக்குரைஞர்-கட்சிக்காரர் நலன்களின்” அடிப்படைக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும், மற்றவற்றுடன் சேவையின் போது கொடுக்கப்பட்ட எந்த ஆலோசனையையும் அவர் வெளியிடக்கூடாது என்று அவர் கூறினார்.
“சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர, மற்றவற்றைப் (ஆலோசனை) பொதுமக்களுக்கு வெளிப்படுத்த முடியாது, அவ்வாறு செய்தால் ஒருமைப்பாடு மற்றும் சட்ட நம்பிக்கையின் கட்டமைப்பு மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விடும், இது சட்டத்துறைத் தலைவர் அல்லது முன்னாள் சட்டத்துறைத் தலைவருக்கும் பொருந்தும்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.
முன்னதாக, டாக்டர் மகாதீர் முகமதுவின் வழக்கறிஞராக பணியாற்றிய ஹனிஃப், கடந்த ஆண்டு பிப்ரவரியில், முன்னாள் பிரதமர் தானாக முன்வந்து இராஜினாமா செய்தார் என்ற தோமஸின் கருத்திற்கு மறுப்பு தெரிவித்தார் – தோமஸின் கூற்றுபடி, அந்த நடவடிக்கை அரசியல் நெருக்கடியைத் தூண்டியதோடு, இறுதியில் அது பக்காத்தான் ஹராப்பான் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
ஆனால், ஹனிஃப்பின் கூற்றுப்படி, ஷெரட்டன் நடவடிக்கையைத் தொடர்ந்து, பி.எச். அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததால், மகாதீர் மத்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு, அகோங்கைச் சந்தித்து தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அதுமட்டுமின்றி, அகோங் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயிலைப் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைத்தபோது, மகாதீர் தலையிட்டு, இடைக்காலப் பிரதமராக விரும்பினார் என்ற தோமஸின் குற்றச்சாட்டு சர்ச்சையைத் தூண்டிவிடுகிறது என்றும் அவர் கூறினார்.
“தோமி தோமஸின் அறிக்கை உண்மையா இல்லையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும், ஏனெனில் இது முன்னர் அறியப்படாத விஷயங்கள் காரணமாக அகோங்கின் நல்லப் பெயரைச் சர்ச்சைக்குள்ளாக்குகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் கருத்து தெரிவிக்கும் முன், அந்த வாழ்க்கைக் குறிப்பைப் படிக்கப்போவதாகவும் ஹனிஃப் கூறினார்.
இதுதொடர்பில், தோமஸின் கருத்தறிய, மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டுள்ளது.
தோமி தோமஸ் முன்னாள் சட்டதுறை அமைச்சர் அல்ல , அவர் முன்னாள் சட்டதுறை தலைமை அதிகாரி