தேசியக் கூட்டணி அரசாங்கம் (பிஎன்), சுகாதார அமைச்சர் ஆடாம் பாபாவுக்குப் பதிலாக, அதிகத் தகுதி வாய்ந்த வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று டிஏபி செனட்டர் லீயு சின் தோங் இன்று வலியுறுத்தினார்.
“சுகாதார அமைச்சர் எங்குச் சென்றார் என்று எங்களுக்குத் தெரியவில்லை, கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இவ்வேளையில், மிக முக்கியமான அமைச்சை வழிநடத்த அவர் தகுதியற்றவர் என்று கருதப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
தற்போது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பதவியை வகிக்கும் கைரி ஜமாலுதீனையும் பிரதமரின் சுகாதார ஆலோசகரான ஜெமிலா மஹ்மூட்டையும் லீயு அப்பதவிக்குப் பரிந்துரைத்தார்.
“அம்னோவிடம் இருந்து அரசியல் நியமனம் தேவைப்பட்டால், அரசியல் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக, குறைந்தபட்சம் கைரி ஜமாலுதீன், ஆடாம் பாபாவை விட மிகவும் திறமையானவர் என்று தெரிகிறது.
“தனிப்பட்ட முறையில், கைரியைச் சுகாதார அமைச்சராக நியமிக்குமாறு நான் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
“அரசாங்கம் கைரிக்கு நோய்த்தடுப்புத் துறையை மட்டுமே வழங்கினால், அவர் தோல்வியடைவதைக் காண அரசாங்கம் விரும்புவதாகத் தோன்றுகிறது, காரணம் சுகாதார அமைச்சின் ஆதரவு கைரிக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
நேற்று, தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சராகக் கைரி நியமிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
அனைத்தையும் டி.ஜி.-யிடம் ஒப்படைப்பது நியாயமல்ல
கொள்கை வகுத்தல் உட்பட அனைத்து பணிகளையும் சுகாதாரத் தலைமை இயக்குநர் (டி.ஜி.) டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவிடம் ஒப்படைப்பது நியாயமற்றது என்று அவர் விவரித்தார்.
அமைச்சரவை மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர், அமைச்சரால் நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளைச் செயல்படுத்துவதை உறுதி செய்வதே சுகாதாரத் தலைமை இயக்குநரின் பணி என்று அவர் இன்று தனது முகநூல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
லீயுவின் கூற்றுப்படி, ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையில், எடுக்கப்படும் அனைத்து கொள்கைகளின் முடிவுகளுக்கும் அமைச்சர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
“ஆடாம் பாபாவின் பலவீனமான அரசியல் தலைமையின் காரணமாக, கோவிட் -19 தொற்றின் கிட்டத்தட்ட அனைத்து நிர்வாகச் சுமைகளையும் சுகாதாரத் தலைமை இயக்குநர் சுமக்க வேண்டியிருக்கிறது. ஆரம்பக் கட்டங்களில், நாட்டிற்கு நிறைய உதவிகள் செய்த நூர் ஹிஷாமுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
“ஆனால் சமீபத்தில், அவரது அணுகுமுறையின் சில அம்சங்கள், சோதனைக் கருவிகளை விரைவாகப் பயன்படுத்துவதில் அவர் தயக்கம் காட்டுவது அல்லது நெருக்கமான அறிகுறி அல்லாத தொடர்புகளை வடிகட்ட மறுப்பது போன்றவை, பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்குப் பங்களித்தன,” என்று அவர் கூறினார்.
தகுதியும் திறமையும் உடைய அமைச்சர் வாய்த்தால், சுகாதாரத் தலைமை இயக்குநர் கடினமான அரசியல் மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதில்லை என்று லீயு கூறினார்.