எஸ்.பி.எம். மாணவர்களுக்கான நேருக்கு நேர் பள்ளி அமர்வு பிப்ரவரி 9-உடன் முடிவடைகிறது

2020-ம் ஆண்டு எஸ்.பி.எம். மற்றும் எஸ்.வி.எம். மாணவர்களுக்கான நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள் பிப்ரவரி 9-ஆம் தேதியுடன் முடிவடையுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 4-ம் தேதியிட்ட, கல்வி தலைமை இயக்குநர் ஹபீபா அப்துல் ரஹீம் வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது.

“பிப்ரவரி 22, 2021 அன்று, தேர்வு தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்குச் சுயத் தயார்நிலைக்கு இடம் கொடுப்பதற்காக வகுப்புகள் நிறுத்தப்படுகின்றன,” என்று அவர் கல்வி அமைச்சின் அனைத்து பிரிவுத் தலைவர்கள் மற்றும் மாநிலக் கல்வி இயக்குநர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்தார்.

ஜனவரி 11-ம் தேதி, எஸ்.பி.எம். 2020 மற்றும் 2021 அமர்வுகள் உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் முக்கியத் தேர்வுகளின் வேட்பாளர்கள், கடுமையான எஸ்ஓபி-க்களுடன் பள்ளியில் சேர அனுமதிக்கப்படுவதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார்.

கடுமையான இயக்கக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், குறிப்பாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளுக்கு (பி.கே.பி.) உட்பட்ட மாநிலங்களிலும், மாணவர்கள் மற்றும் பிரதான தேர்வுகளுக்கான வேட்பாளர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படுவதாக முஹைதீன் கூறினார்.

சுற்றறிக்கையின் படி, தங்குமிடங்களில் வசிக்கும் மாணவர்கள் அங்கேயே இருக்க வேண்டும்.

இருப்பினும், சீனப் புத்தாண்டைத் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட விரும்பும் மாணவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன, பள்ளி அமர்வுகள் முடிந்ததும் அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, விடுதிக்குத் திரும்பும் மாணவர்கள், கோவிட் -19 எஸ்ஓபி-க்களுக்கு இணங்க 10 நாட்கள் விடுதியில் தனிமைப்படுத்தப்படுவார்.

இதற்கிடையில், மலேசியத் தேசியக் கற்பித்தல் தொழில் சங்கத்தின் (என்யூடிபி) தலைவர் அமினுட்டின்தீன் அவாங், கற்றல் செயல்முறைகள் வீட்டிலேயே தொடரும் என்றார்.

“ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்முறைகள் தேர்வு நாள் வரையில் இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் வழி தொடரும்.

“மாணவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படக்கூடும், ஆனால் அவர்கள் எஸ்.பி.எம். தேர்வைத் தொடரலாம். பிப்ரவரி 22 அன்று திட்டமிடப்பட்டபடி, தேர்வு நடைபெறுவதை நாங்கள் ஆதரிக்கிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.