சில நாட்களுக்கு முன்பு, இப்பிரச்சினை அதிகக் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியதிலிருந்து, முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) தோமி தாமஸின் நினைவுக் குறிப்பு வெளியீடு தொடர்பாக, ஜொகூர் காவல்துறைக்கு இதுவரை பல்வேறு தரப்பினரிடமிருந்து 16 புகார்கள் வந்துள்ளன.
புகார்களைத் தொடர்ந்து, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500 மற்றும் பிரிவு 203A மற்றும் அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டம் 1972 பிரிவு 8 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டதாக, பெர்னாமா தொடர்பு கொண்டபோது, ஜொகூர் காவல்துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்தார்.
ஜூன் 2018 முதல் கடந்த ஆண்டு பிப்ரவரி வரை ஏஜி-யாக இருந்த தாமஸ், அவரின் ‘மை ஸ்டோரி : ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னெஸ்’ என்ற புத்தகத்தில் பல்வேறு தவறான, அவமதிக்கும் மற்றும் அவதூறான செய்திகள் இருப்பதாகச் சிலர் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானார்.
புத்தகத்தின் உள்ளடக்கங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் போலிஸ் புகார்களைப் பதிவு செய்துள்ளனர், அவற்றில் ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு, நேற்று பிற்பகல் தென் ஜொகூர் பாரு மாவட்டக் காவல் தலைமையகத்தில் போலிஸ் புகாரைப் பதிவு செய்ததும் அடங்கும்.
- பெர்னாமா