கே.பி.டி.என்.எச்.இ.பி. : உணவகங்களில் சாப்பிட அனுமதிக்க வேண்டும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.) காலகட்டத்தில், உணவு விற்பனை செய்யும் வளாகங்களில் ‘உணவருந்த’ அனுமதிக்கப்பட வேண்டுமென, உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு (கே.பி.டி.என்.எச்.இ.பி.)  விண்ணப்பிக்க உள்ளது.

விண்ணப்பத்தை மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் அல்லது தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் (எம்.கே.என்.) சமர்ப்பிக்கவுள்ளதாக அதன் துணை அமைச்சர் ரோசோல் வாஹிட் தெரிவித்தார்.

உணவக உரிமையாளர்கள் மற்றும் ‘டிரக்’ உணவு வர்த்தகர்கள் மட்டுமல்லாமல், தொழிலாளர்கள், உணவு வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் நலனையும் பாதுகாப்பதற்காக இந்த விண்ணப்பம் செய்யப்படும் என்றார் அவர்.

 

“சாப்பிட அனுமதிக்கப்படும் ஒவ்வொரு உணவு வளாகத்திற்கும், மூலப்பொருட்கள் விநியோகிப்பாளர்களின் தொடர்பில் ஈடுபட்டுள்ள குறைந்தது ஐவரின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் மீட்டெடுக்க இது உதவும்,” என்று இன்று, திரெங்கானுவில், ‘பிரிஹாத்தின் மார்ட்’ நடமாடும் மளிகைக் கடைகளின் விற்பனையை ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், பி.கே.பி. காலகட்டத்தில், வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, குறிப்பாக சீனப் புத்தாண்டு மற்றும் இன்னும் சில மாதங்களில் கொண்டாடப்படவுள்ள நோன்புப் பெருநாள் பண்டிகைகளின் போது, துணிகள் விற்கும் வளாகங்களையும் அனுமதிக்க வேண்டுமென்றும் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

“நாம் பொருளாதாரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இடையில் ஒரு குழப்பத்தில் இருப்பதை அறிவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, கட்டுமானத் தளங்களிலேயே புதியத் திரளைகள் உருவாகின்றன, உணவகங்கள், இரவு சந்தைகள் மற்றும் ஆடை விற்பனை வளாகங்கள் போன்ற வணிகப் பகுதிகளில் அவை நேர்ந்ததில்லை, எனவே எம்.கே.என். இதனைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்.

“இது கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அடிமட்ட மக்களின் மனக்குமுறல்கள் ஆகும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா