இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) செயல்முறையை அமல்படுத்தியப் பின்னர், அதற்கான உபகரணங்களின் தேவைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து மடிக்கணினிகள் மற்றும் மின்னணு கேஜெட்களின் விலை 70 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கில், இரண்டு முன்னணி விற்பனை மையங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருப்பதாக சினார் ஹரியான் தெரிவித்தது.
எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு ஒரு கணக்கெடுப்பின் போது, RM1,300-ஆக இருந்த ஏ1 தரவகை மடிகணினியின் விலை இப்போது 78 விழுக்காடு அதிகரித்து RM2,322-ஆக இருக்கிறது.
பிற வகைகளுக்கு :
ஏ2 தரவகை – ஒன்று RM1,899-க்கு விற்கப்படுகிறது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது RM1,300-லிருந்து 46 விழுக்காடு அதிகரித்துள்ளது.
எஸ் தரவகை (பி.டி.பிஆருக்கான நுகர்வோர் தேர்வு தரவகை) – RM599-லிருந்து RM759-க்கு உயர்ந்துள்ளது.
அடையாளம் கூற விரும்பாத ஒரு கடை உரிமையாளரை மேற்கோள் காட்டி, அதிகத் தேவை மற்றும் வழங்கல் பற்றாக்குறையால் விலை உயர்வுகள் நேர்ந்துள்ளதாக அச்செய்தித்தாள் அறிவித்தது.
இந்தக் கட்டத்தில் ‘எஸ்’ தரவகை மடிகணினி அதிதேவையான சாதனமாக மாறி வருகிறது. நிறைய இடங்களில் கையிருப்பில் இல்லை.
“எனவே, இருக்கும் இடத்தில், அவர்கள் அதை அதிக விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.