கிளந்தான், மாச்சாங்கில் உள்ள ஓர் உறைவிடப் பள்ளியில், எஸ்.பி.எம். தேர்வு எழுதவுள்ள 41 மாணவர்களுக்குக் கோவிட் -19 தொற்று கண்டுள்ளது இன்று உறுதி செய்யப்பட்டது.
மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர், டாக்டர் ஸைனி ஹுசின் கூறுகையில், அனைத்து மாணவர்களும், கோத்தா பாரு, ஜூப்லி பேராக் மண்டபம் மற்றும் கிளாந்தான் இஸ்லாமியப் பயிற்சி மையத்திற்குத் தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர் என்றார்.
மாச்சாங், தானா மேரா, பாசீர் பூத்தே ஆகிய மாவட்டகளை உள்ளடக்கிய பங்கால் சங்கோங் திரளை சார்ந்த நெருங்கியத் தொடர்பினால் இந்நோய்த்தொற்று பரவியுள்ளது என்று அவர் கூறினார்.
இன்றுவரை, அத்திரளையில் 56 நேர்மறை கோவிட் -19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கோவிட் -19 தொற்றின் வளர்ச்சி குறித்த தினசரி செய்தியாளர் சந்திப்பில், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கிளாந்தானில் 88 நேர்மறை வழக்குகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் கொடுத்தார்.