இன்று 2,998 புதிய நோய்த்தொற்றுகள், மொத்த மரண எண்ணிக்கை 1000-ஐ மிஞ்சியது

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,998 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இறப்புகள் இன்று 22-ஆக அதிகரித்துள்ளன (நேற்று 8 இறப்புகளுடன் ஒப்பிடும்போது), மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,005.

“சிலாங்கூரில் எட்டு, சபாவில் நான்கு, கோலாலம்பூரில் மூன்று, சரவாக் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு, நெகிரி செம்பிலான், கெடா மற்றும் ஜொகூரில் தலா ஒரு மரணமும் நேர்ந்துள்ளன.

“மரணமடைந்த அனைவரும் மலேசியர்கள். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சுகாதார அமைச்சு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

இன்று 5,709 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 115 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (1382), ஜொகூர் (436), நெகிரி செம்பிலான் (233), கோலாலம்பூர் (226), சரவாக் (200), பேராக் (99), சபா (94), பினாங்கு (92), திரெங்கானு (91), கிளந்தான் (72),  கெடா (36), மலாக்கா (20), பஹாங் (14), புத்ராஜெயா (2), லாபுவான் (1).

இன்று 13 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 10 பணியிடம் சார்ந்தவை.