கோவிட் -19 செந்தர இயங்குதல் நடைமுறையை (எஸ்ஓபி) மீறியதாகக் கூறப்படும் அன்னுவார் மூசாவின் வழக்கை, காவல்துறை ஏன் சட்டத்துறைத் தலைவருக்கு (ஏஜி) அனுப்ப வேண்டும் என்று புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் கேள்வி எழுப்பினார்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் சைபுல் அஸ்லி கமருதீனின் செயலை “முட்டாள்தனம்” என்றும், “ஒரு தலைபட்சமானது” என்றும் ராம்கர்பால் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“ஏஜி-யிடம் கலந்தாலோசிக்கும் அளவுக்கு அன்னுவாரின் வழக்கு ஏன் வேறுபட்டது?
“ஒருவேளை, தண்டனைச் சட்டத்தின் கீழ் இணைக்கப்படாத, எந்தவொரு துப்பும் இல்லாத குற்றத்திற்காக அன்னுவார் விசாரிக்கப்பட்டால் ஏஜியிடம் ஆலோசனைக் கேட்கலாம், ஆனால் அவர் எஸ்.ஓ.பி.-ஐ மீறியுள்ளார், ஆக அவர் மற்ற குடிமக்களைப் போலவே கருதப்பட வேண்டும்.
“நிச்சயமாக, மாமன்னர் மற்றும் பிரதமரின் அவசரகால அறிவிப்பு கட்டளையினால் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற இடைநிறுத்தத்தின் போது, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய, இன்னும் பல அவசர விஷயங்கள் ஏஜிக்கு உள்ளன,” என்று அவர் கூறினார்.
தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988-இன் பிரிவு 25-ன் கீழ், எஸ்ஓபியை மீறுபவர்களுக்குத் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது என்பதை டிஏபி தேசியச் சட்டப் பணியகத்தின் தலைவர் நினைவுறுத்தினார்.
“அன்னுவார் ஏன் மற்றவர்களைப் போல நடத்தப்படவில்லை?” என்று ராம்கர்ப்பால் கேள்வி எழுப்பினார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சருக்குத் தண்டம் விதிக்க காவல்துறை தவறிவிட்டால், அரசியல்வாதிகளையும் சாதாரண மக்களையும் கையாள்வதில் அவர்கள் ஒரு தலைபட்சமாக நடந்துகொள்வதாகக் கருதப்படலாம் என்றும் அவர் கூறினார்.
தொடர்பு கொண்டபோது, அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த சைஃபுல், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த வழக்கைப் பற்றி விளக்கிவிட்டதாகவும் கூறினார்.
முன்னதாக, பெரித்தா ஹரியான், மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணை அறிக்கையைச் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் முன், இந்த வழக்கின் உண்மைகளையும் ஆதாரங்களையும் போலீசார் ஆராய்ந்து வருவதாக செய்தி வெளியிட்டது.
நேற்று, அன்னுவார் மற்றும் பலரின் வாக்குமூலங்களைப் போலீசார் பதிவு செய்தனர்.
அவரும், மற்ற 6 பேரும் ஒரே மேசையில் அமர்ந்திருக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதையடுத்து, அன்னுவார் எஸ்ஓபியை மீறியதாக அவர் மீது குற்றம் கூறப்பட்டது.
பிப்ரவரி 13-ம் தேதி, ஶ்ரீ பெட்டாலிங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.